லட்சத்தீவுக்கு பயோ வெப்பன்… நடிகை ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்குப்பதிவு.!

Scroll Down To Discover
Spread the love

லட்சத்தீவு விவகாரம் தொடர்பாக தொலைக்காட்சி விவாதத்தில் சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறிய நடிகை ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

யூனியன் பிரதேசமான லட்சத்தீவின் நிர்வாகியாக பிரஃபுல் படேலை மத்திய அரசு சமீபத்தில் நியமித்தது. அவரது நியமனத்திற்கு பிறகு சீர்திருத்தம் என்ற பெயரில் மாட்டு இறைச்சிக்கு தடை விதித்தது, மதுபான கூடங்களுக்கு அனுமதி வழங்கியது, பள்ளிகளில் இறைச்சிக்கு தடை விதித்தது என அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

அவரது நடவடிக்கைகள் லட்சத்தீவு மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரஃபுல் பட்டேலை திரும்ப பெறக்கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக லட்சத்தீவைச் சேர்ந்த திரைப்பட நடிகையும், இயக்குநருமான ஆயிஷா சுல்தானா அண்மையில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அந்த விவாதத்தில் பேசிய ஆயிஷா, மத்திய அரசால் லட்சத்தீவுக்கு பயோ வெப்பன் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.ஆயிஷா சுல்தானாவின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சை குறிப்பிட்டு லட்சத்தீவு பாஜக தலைவர் அப்துல் காதர் ஹாஜி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில் காவரட்டி காவல்துறை ஆயிஷா சுல்தானா மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்துள்ளது. இதற்கிடையில் தனது பேச்சு குறித்து விளக்கமளித்த ஆயிஷா, மத்திய அரசால் அனுப்பப்பட்ட பிரஃபுல் படேலை தான் ‘பயோ வெப்பன்’ என குறிப்பிட்டு பேசியதாகவும் நாட்டையோ, அரசாங்கத்தையோ அவ்வாறு குறிப்பிடவில்லை எனவும் தெரிவித்தார்.