மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டுகள் தயாரிக்கும் இயந்திரங்கள் வாங்கப்பட்ட நிலையில் இலவச லட்டு திட்டம் தள்ளிவைப்பு..!

Scroll Down To Discover
Spread the love

மதுரை என்றாலே பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவிலாகும். சிவபெருமான் மற்றும் அம்மன் இருவருக்குமான கோவில்களில் முதன்மைச் சிறப்பு பெற்றது மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில். இந்தியாவில் உள்ள தூய்மையான புனித தலங்களில் 2-வது இடம் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, சமீபத்தில் அதற்கான விருது வழங்கப்பட்டது. கோயில்களில் அதன் வருமானத்திற்கு தகுந்தாற்போல பிரசாதமாக லட்டு, புளியோதரை, பொங்கல், வெண்பொங்கல் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் காலையில் ஞானப்பால் மட்டுமே பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வருகிற தீபாவளி முதல் (27-ம் தேதி) கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக லட்டு பிரசாதம் வினியோகம் செய்யப்படும் என  கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில், கோவிலில் இலவச லட்டு வழங்கும் திட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும், லட்டுகள் தயாரிப்பு இயந்திரங்கள் வாங்கப்பட்ட நிலையில் கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தாததால் திட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. ஆகவே திட்டமிட்டபடி தீபாவளி தினத்திலிருந்து  லட்டு வழங்க முடியாது என்பதால் வேறொரு தேதியில் லட்டு வழங்குவதற்கான பணிகள் நடைபெறும் என கோவில் நிர்வாகத்தின் தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.