சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாட்ஷா மீதான சிலைக்கடத்தல் வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

Scroll Down To Discover
Spread the love

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆலடிப்பட்டி கிராமத்தில், கடந்த 2008ஆம் ஆண்டு ஆரோக்கியராஜ் என்பவரின் வீட்டில் அஸ்திவாரம் தோண்டியபோது 6 ஐம்பொன் சிலைகள் கிடைத்ததாகவும், அதை கைப்பற்றிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் அப்போதைய ஆய்வாளர் காதர் பாட்ஷா, உதவி ஆய்வாளர் சுப்புராஜ் ஆகியோர் 6 கோடி ரூபாய்க்கு சிலைகளை விற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து இருவர் மீதும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்ட பிறகும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், காவல் ஆய்வாளராக இருந்த காதர் பாட்ஷா டி.எஸ்.பி யாகவும், இதேபோல சுப்புராஜ் ஆய்வாளராகவும் பதவி உயர்வு பெற்றதால் அவர்கள் மீது நடவடிக்கை கோரியும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கை விசாரித்த ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர், காதர் பாட்சா, சுப்புராஜ் உள்ளிட்டோர் மீது 2017ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். அதன் பிறகு டிஎஸ்பி காதர் பாட்சா சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி காதர்பாட்சா, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

டிஎஸ்பி காதர் பாட்சா

அந்த மனுவில், 9 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு பதியப்பட்டுள்ளது என்றும், சாட்சியங்களின் வாக்குமூலங்களை முழுமையாக ஆய்வு செய்யாமல் தன் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென கோரியிருந்தார். இந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பளித்த நீதிபதி பாரதிதாசன், வழக்கை ரத்து செய்ய வேண்டுமென்ற காதர் பாட்ஷா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்