டெல்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.
டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர் என்று சந்தேகிக்கப்படும் மருத்துவர் உமர் முகமதுவின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. திங்கள் கிழமை மாலை செங்கோட்டை அருகே வெடித்துச் சிதறிய வெள்ளை நிற ஹூண்டாய் ஐ20 காரை உமர் இயக்கிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் உள்துறை செயலர், உளவுத்துறை இயக்குநர், டெல்லி போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இரண்டு நாள் அரசு பயணமாக பூடான் நாட்டுக்கு சென்றுள்ளார் பிரதமர் மோடி. அங்கே திம்புவில் நடந்த ஒரு நிகழ்வில் அவர் பேசுகையில், “இன்று, நான் மிகவும் கனத்த இதயத்துடன் இங்கு வந்துள்ளேன். நேற்று மாலை டெல்லியில் நடந்த கொடூரமான சம்பவம் அனைவரையும் மிகவும் வருத்தப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தை நான் புரிந்துகொள்கிறேன். இன்று முழு தேசமும் அவர்களுடன் நிற்கிறது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் அனைத்து நிறுவனங்களுடனும் நான் நேற்று இரவு முழுவதும் தொடர்பில் இருந்தேன். எங்கள் விசாரணை அமைப்புகள் இந்த சதித்திட்டத்தின் காரணத்தை கண்டுபிடிக்கும். இதற்குப் பின்னால் உள்ள சதிகாரர்கள் தப்பவிடப்பட மாட்டார்கள். இந்த கொடிய சம்பவத்துக்கு பின்னால் உள்ள அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்” என்று கூறினார்.

Leave your comments here...