உலக நீரிழிவு நோய் தினம் – ஈஷா சார்பில் கோவையில் 2 இலவச மருத்துவ முகாம்கள்..!  

Scroll Down To Discover
Spread the love

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு ஈஷா ஆரோக்கிய அலை அமைப்பு சார்பில் கோவையில் 2 இலவச பல்துறை மருத்துவ முகாம்கள் அக். 29 மற்றும் நவ.4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

முதல் முகாம் ஆலாந்துறை அரசு உயர்நிலைப் பள்ளியில் அக்.29-ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். இதில் பொது மருத்துவம் மட்டுமின்றி நரம்பு, கண், தோல், பல், பெண்கள் நலன் ஆகிய மருத்துவங்கள் தொடர்பான இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும், முகாமின் சிறப்பம்சமாக நீரிழிவு நோயுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளை இலவசமாக செய்து கொள்ளலாம். இதில் கண் விழித்திரை பரிசோதனை, பாத நரம்பு பரிசோதனை, HB, Hb1c, RBS, RFT, ECG உள்ளிட்ட பரிசோதனைகள் அடங்கும்.

இதுதவிர, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் இலவசமாக வழங்கப்படும். இம்முகாமில் பங்கேற்க விரும்பும் கிராம மக்களின் நலனுக்காக தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு 94425 90059 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் 10-ல் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 25 பேரில் ஒருவர் நீரிழிவு நோய் பாதிப்புக்கு முந்தைய கட்டத்தில் உள்ளார். மக்களின் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் நீரிழிவு நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து அதற்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் எடுத்து கொள்ளும் விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்தில் இம்மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம், சோழா குழுமம், ராவ் மருத்துவமனை, அரவிந்த் கண் மருத்துவமனை, ஆலாந்துறை ஈஷா தன்னார்வ தொண்டர்கள் ஆகியோர் இணைந்து இம்முகாமை ஏற்பாடு செய்துள்ளனர்.

இதேபோல், 2-வது பல்துறை மருத்துவ முகாம் முட்டத்துயவல் பகுதியில் உள்ள ஈஷா கிராம மருத்துவமனையில் நவம்பர் 4-ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். மேலும், ஈஷாவின் வழிகாட்டுதலில் இயங்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அமைந்துள்ள ஈரோடு, சேலம், நீலகிரி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், கர்நாடகாவிலும் இதுபோன்ற மருத்துவ முகாம்கள் அடுத்தடுத்த வாரங்களில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.