ஐப்பசி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை இன்று திறப்பு..!

Scroll Down To Discover
Spread the love

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள் நடைபெறும். அதன்படி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி தீபாராதனை காட்டுகிறார்.

நாளை (18-ந் தேதி) முதல் 5 நாட்கள் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறும். 22-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது.

ஐப்பசி மாத பூஜையையொட்டி சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரள அரசின் சிறப்பு பஸ்கள் சபரிமலைக்கு இயக்கப்படுகின்றன. அதேபோல, ஆன்லைன் முன்பதிவு அடிப்படையிலேயே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. நிலக்கல் பகுதியில் தற்காலிக முன்பதிவு மையம் இன்று முதல் செயல்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.