பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறவில்லை – பவன் கல்யாண் மறுப்பு.!

Scroll Down To Discover
Spread the love

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

நிதி முறைகேடு வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடுவை நடிகர் பவன் கல்யாண் சந்தித்து பேசினார். இதையடுத்து பவன் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டதாக பரவலாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், கிருஷ்ணா மாவட்டம் கைகலூரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய பவன் கல்யாண்; பாஜக கூட்டணியில் இருந்து தனது கட்சி வெளியேறவில்லை என்றார். பாஜக கூட்டணியில் இருந்து ஜனசேனா கட்சி விலகிவிட்டதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள் நாடு முழுவதும் தவறான பிரச்சாரம் செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஒருவேளை பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இருந்தால் அதை நானே கூறுவேன் என்றும் பவன் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் ஆசியுடன் ஆந்திராவில் தெலுங்கு தேசம் ஜனசேனா கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என்றும் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.