மணிப்பூரில் பெண்களை நிர்வணப்படுத்தி வீடியோ : கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி..!

Scroll Down To Discover
Spread the love

மணிப்பூரில் பெண்களை நிர்வணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற விவகாரம் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசு ஜூலை 28 ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மணிப்பூரில் இரு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்லவமாக அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் தொடர்பான வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் பழங்குடியினர் அந்தஸ்து கோரி வருகின்றனர். இதற்கு குகி சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக இரு சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் இனக்கலவரமாக மாறியுள்ளது. கடந்த இரு மாதங்களாக நீடித்து வரும் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன. கலவரத்தை உடனடியாக நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்ததாக காணொலி ஒன்று நேற்று இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில், மணிப்பூர் வீடியோ குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வேதனை தெரிவித்துள்ளார். மணிப்பூர் பெண்கள் மீதான பாலியல் வன்மம் விவகாரத்தை ஏற்க முடியாது என்றும் அந்த சம்பவம் கடும் வேதனை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.மணிப்பூரில் இருந்து வெளியாகியுள்ள வீடியோக்கள் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

மணிப்பூர் வீடியோ தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் உச்சநீதிமன்றம. தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் என தலைமை நீதிபதி சந்திரசூட் எச்சரித்தார். மத்திய மற்றும் மாநில அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையினை அடுத்த வெள்ளிக்கிழமைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் உத்தரவிட்டுள்ளார்.