பள்ளிக்கல்வி துறைக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.3 ஆயிரம் கோடி நிதி என்ன ஆனது? – அமைச்சர் விளக்கம் அளிக்க அண்ணாமலை வலியுறுத்தல்..!

Scroll Down To Discover
Spread the love

தமிழக பள்ளிகளுக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.3 ஆயிரம் கோடி நிதி என்ன ஆனது? என்பது பற்றி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:- 2030-ம் ஆண்டுக்குள், நாட்டில் உள்ள அத்தனை குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளும் சிறப்பான கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவருக்கும் கல்வி உரிமைத்திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்தத்திட்டத்தின் மூலம், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் ஏழை-எளிய மாணவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கல்வி செலவை மத்திய அரசே ஏற்றுக்கொள்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுகளுக்கு இதற்கான நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை இந்தத்திட்டத்துக்கு 2021-22-ம் ஆண்டில் ரூ.1,598 கோடியும், 2022-23-ம் ஆண்டுக்கு கடந்த டிசம்பர் மாதம் வரையில் ரூ.1,421 கோடியும் மத்திய அரசு வழங்கியுள்ளது.

இந்தநிலையில், 2 ஆண்டுகளாக தமிழக பள்ளிகளுக்கு மழலையர் வகுப்புக்கான நிதி வழங்கப்படவில்லை என்று தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம் சாட்டியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 2 ஆண்டுகளுக்கான கல்விக்கட்டணத்தை தமிழக அரசு வழங்காவிட்டால், வரும் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தனியார் பள்ளி சங்கங்கள் வருத்தம் தெரிவிக்கின்றன. இந்தத் திட்டத்துக்காக 2 ஆண்டுகளாக மத்திய அரசு வழங்கிய நிதி சுமார் ரூ.3 ஆயிரம் கோடி என்ன ஆனது? என்பதை தமிழக பள்ளிக்கல்வித்துறை வௌிப்படையாக அறிவிக்கவேண்டும்.

ஏழை-எளிய மாணவர்களுக்கு கிடைக்கும் கல்வி வாய்ப்புகளில், தங்களது மெத்தனத்தை அமைச்சர் காட்டக்கூடாது. உடனடியாக கல்விக்கட்டண நிலுவைத்தொகையை பள்ளிகளுக்கு வழங்கி நடப்பு ஆண்டு மாணவர் சேர்க்கையை உறுதி செய்யவேண்டும். மேலும் தமிழகம் முழுவதும் பாழடைந்து கிடக்கும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான அரசுப்பள்ளி கட்டிடங்களை சீரமைக்கப் போவதாக கடந்த ஆண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார். கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலம் ஆகப்போகிறது. அந்தப்பள்ளி கட்டிடங்களின் தற்போதைய நிலை என்ன? என்பதை அமைச்சர் கூறவேண்டும்.

தமிழகத்தை விளையாட்டின் தலைநகராக மாற்றுவோம் என்று பதவியேற்றபோது உறுதியளித்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசுப்பள்ளிகளில் தரமான உட்கட்டமைப்பு, விளையாட்டு மைதானங்கள் மற்றும் உபகரணங்களோ இல்லை என்பதை அறிவாரா? அரசுப்பள்ளிகளை மேம்படுத்த, அவர் என்ன நடவடிக்கைகள் இதுவரை எடுத்துள்ளார்? அரசுப்பள்ளிகளை மேம்படுத்துவதால் தங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துவிடும் என்ற அச்சத்திலும், தங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் பள்ளிகளில் 25 சதவீதம் இடங்களை ஏழை-எளிய மாணவர்களின் கல்விக்காக ஒதுக்க விரும்பாமலும், ஒட்டுமொத்தமாக இந்தத்திட்டத்தையே முடக்க நினைக்கிறதோ என்ற வகையில் தி.மு.க. அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன.

ஏழை-எளிய மாணவர்கள் கல்வி பெறுவதை தடுக்க முயற்சிக்காமல், தி.மு.க. அரசு உடனடியாக பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். மேலும் இந்த ஆண்டு கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையை உறுதி செய்யவேண்டும். அரசுப்பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கையும் எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.