இந்தியா சிங்கப்பூர் இடையே UPI-PayNow இணையவழி பண பரிவர்த்தனை -தொடங்கி வைத்த பிரதமர் மோடி..!

Scroll Down To Discover
Spread the love

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் ஆகியோர் முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையே யுபிஐ-பேநவ் (UPI-PayNow) இணையவழி பண பரிவர்த்தனை இணைப்பை இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மற்றும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் இயக்குனர் ரவி மேனன் ஆகியோர் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தனர்.

பின்னர் யுபிஐ-பேநவ் இணைப்பு குறித்து பிரதமர் மோடி கூறியதாவது:- இணைய வழி பண பறிமாற்றமான யுபிஐ-பேநவ் இணைப்பு நமது புலம்பெயர்ந்தோர், தொழில் வல்லுநர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு பயனளிக்கும்.

இன்றைய காலகட்டத்தில், தொழில்நுட்பம் நம்மை பல வழிகளில் இணைக்கிறது. பின்டெக் (fintech) என்பது மக்களை ஒருவருக்கொருவர் இணைக்கும் ஒரு துறையாகும். பொதுவாக, அது ஒரு நாட்டின் எல்லைக்குள் மட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால் இன்றைய வெளியீடு எல்லை தாண்டிய ஃபின்டெக் இணைப்பின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.


யுபிஐ-பேநவ் இணைப்பு (இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே) தொடங்கப்பட்டது, இரு நாட்டு குடிமக்களுக்கும் அவர்கள் ஆவலுடன் காத்திருந்த ஒரு பரிசாகும். இதற்காக இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாட்டு மக்களுக்கும் எனது வாழ்த்துகள்.

கடந்த சில ஆண்டுகளில், புதுமை மற்றும் நவீன மயமாக்கலுக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்கு இந்தியா அதிக முன்னுரிமை அளித்துள்ளது. நம் டிஜிட்டல் இந்தியா திட்டத்தால், எளிதாக வணிகம் செய்ய முடியும். இதனுடன், டிஜிட்டல் இணைப்பைத் தவிர, நிதி உள்ளடக்கமும் ஒரு உந்துதலைப் பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.