17 ஆண்டுகளில் இதுவே முதல் தடவை – 840 விமானங்களை வாங்கும் ஏர் இந்தியா நிறுவனம்

Scroll Down To Discover
Spread the love

மத்திய பொதுத்துறை விமான நிறுவனமாக இருந்த ஏர் இந்தியாவை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டாடா குழுமம் விலைக்கு வாங்கியது. இந்தநிலையில், ஏர் இந்தியாவை விரிவுபடுத்தும் நோக்கத்தில், 840 விமானங்களை வாங்க டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஏர்பஸ், போயிங் ஆகிய விமான நிறுவனங்களிடம் இருந்து 840 விமானங்கள் வாங்க ‘ஆர்டர்’ கொடுத்துள்ளது.

இது குறித்து ஏர் இந்தியாவின் தலைமை வர்த்தக அதிகாரி நிபுன் அகர்வால் கூறியதாவது:- ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களும், போயிங் நிறுவனத்திடம் இருந்து 220 விமானங்களும் வாங்கப்படும். மீதி 370 விமானங்களை கொள்முதல் உரிமத்துடன் வாங்குவோம்.

முதலாவது ஏ350 ரக விமானம், இந்த ஆண்டு இறுதிக்குள் எங்களிடம் ஒப்படைக்கப்படும். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அனைத்து விமானங்களும் வந்து சேர்ந்து விடும். கடந்த 2005-ம் ஆண்டு ஏர் இந்தியா 111 விமானங்களை வாங்க ‘ஆர்டர்’ அளித்தது.

அதன்பிறகு, கடந்த 17 ஆண்டுகளில் ஏர் இந்தியா விமானங்களை கொள்முதல் செய்வது இதுவே முதல்முறை ஆகும். ஏர் இந்தியாவின் மிகப்பெரிய விமான ஆர்டர் இதுதான். இந்திய விமான போக்குவரத்து வரலாற்றில் இது மைல்கல்லாக அமையும். ஏர் இந்தியாவை உலகத்தரமான விமான நிறுவனமாக மாற்றுவதற்காகவும், உலகத்தின் முக்கிய நகரங்களுக்கு இடைவிடாமல் விமான சேவையை அளிப்பதற்காகவும் விமானங்களை வாங்குகிறோம். இதுதவிர, விமான என்ஜின்களை நீண்ட காலம் பராமரிப்பதற்காக சி.எப்.எம்.இன்டர்நேஷனல், ரோல்ஸ்ராய்ஸ், ஜிஈ ஏரோஸ்பேஸ் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். ஏர்பஸ், போயிங் நிறுவனங்களிடம் இருந்து ஏர் இந்தியா விமானங்கள் வாங்குவதை பிரதமர் மோடியும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் ஏற்கனவே வரவேற்றுள்ளனர்.