இந்தியாவில் பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் தடுக்கப்படுவது எப்படி..? பெரிய பாதிப்புக்கு வாய்ப்பில்லை என நிபுணர்கள் தகவல்..!

Scroll Down To Discover

இந்தியாவில் பயங்கர நிலநடுக்கங்கள் தடுக்கப்படுவது எப்படி என்பது குறித்து நிபுணர் கருத்து தெரிவித்துள்ளார்.

துருக்கியிலும், சிரியாவிலும் கடந்த திங்கட்கிழமை பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக அடுக்குமாடி கட்டிடங்கள் எல்லாம் சரிந்து விழுந்தன. இதன் இடிபாடுகளில் சிக்கி பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கிறார்கள். இது அங்கு தீராத சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இப்படிப்பட்ட பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் இந்தியாவில் தடுக்கப்படுகின்றன. சிறிய அளவிலான நிலநடுக்கங்கள்தான் இத்தகைய பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படாமல் தடுக்கின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது பற்றி நிபுணர்கள் கூறும்போது, “சிறிய அளவிலான நில அதிர்வுகள், புவித்தட்டுகளின் அழுத்தத்தை விடுவிக்க உதவுகின்றன. பேரழிவில் இருந்து இந்தியாவைக் காக்க உதவுகின்றன. பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டாலும் அவற்றை சமாளிக்க இந்தியா நன்கு தயாராக உள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையின் அர்ப்பணிப்பும், அதன் வீரர்கள் பெற்றுள்ள பயிற்சியும் சிறப்பானவை” என்று அவர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் நில நடுக்கங்கள் பெரிய அளவில் நேராமல் தடுப்பது பற்றி புவி அறிவியல்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நில அதிர்வுக்கான தேசிய மையத்தின் இயக்குனர் ஓ.பி.மிஷ்ரா கூறுகையில், “பாகிஸ்தானுடனான எல்லைக்கு அருகே இந்தியாவின் மேற்கு பகுதியில் உள்ள முச்சந்திப்பு, சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் காரணமாக தொடர்ந்து அழுத்தத்தை வெளியிடுகிறது. அவற்றில் சில நில நடுக்கங்கள் 4 மற்றும் 5 ரிக்டர் அளவிலானவை” என்று தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் கூறும்போது, “இந்த முச்சந்திப்பு இறுக்கமானது, கச்சிதமானது, அது அதிக அழுத்தத்தைத் தாங்கக்கூடியதாகும். இந்த அழுத்தம் உடைகிறபோது, அது பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தும்” என்கிறார்.

துருக்கியில் ஏன் பெரிய நிலநடுக்கம்? துருக்கியில் இப்படி 2 முச்சந்திப்புகள் உள்ளனவாம். அவற்றில் ஒன்றான அரேபியன் தட்டு, அனடோலியன் தட்டு, ஆப்பிரிக்கள் தட்டு சந்திக்கும் முச்சந்திப்பு உடைந்ததால்தான் துருக்கி, சிரியா பேரிழப்புகளுக்கு ஆளாகினவாம். “அங்கு சிறிய அளவிலான நில நடுக்கங்கள் ஏற்படாததால், நிறைய அழுத்தம் குவிந்தது. இதனால்தான் துருக்கி சக்திவாய்ந்த பல நிலநடுக்கங்களை சந்தித்தது” என்றும் நில அதிர்வுக்கான தேசிய மையத்தின் இயக்குனர் ஓ.பி.மிஸ்ரா தெரிவித்தார்.