மக்களை பிளவுபடுத்தும் சாதி வெறியும், வாக்கு வங்கி அரசியலுமே காங்கிரஸ் மாடல் – பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு..!

Scroll Down To Discover
Spread the love

குஜராத்தில் வருகிற டிசம்பர் 1 மற்றும் 5-ந்தேதிகளில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதனால் அங்கு தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகளின் தலைவர்கள் மாநிலத்தில் முகாமிட்டு தொடர்ந்து வாக்கு சேகரித்து வருகின்றனர் அங்கு பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தொடர்ந்து பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

அந்தவகையில் மேசனாவில் நடந்த பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:- காங்கிரஸ் மாடல் என்றால் ஊழல், குடும்ப ஆட்சி, மதவெறி, சாதி வெறி என்பவை ஆகும். வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதிலும், அதிகாரத்தில் இருப்பதற்காக மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதிலும் அவர்கள் பெயர் பெற்றவர்கள். இந்த மாடல் குஜராத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டையுமே சீரழித்து விட்டது. அதனால்தான் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல நாம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்

இதைத்தொடர்ந்து தகோத், வதோதரா, பாவ்நகர் போன்ற இடங்களிலும் அவர் தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்றார். இதற்கிடையே ஜாம்நகர் அரச குடும்ப வாரிசான ஜாம் சாகேப் சத்ருசல்யா சிங் சமீபத்தில் தனது வீட்டில் இருந்தவாறே குஜராத் தேர்தலுக்கான தனது வாக்கை செலுத்தினார். முதிர்ந்த வயதில் உள்ள அவரது வாக்கை பெறுவதற்காக துணை கலெக்டர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் அவரது வீட்டுக்கேசென்றிருந்தனர்.

இந்த செய்தியை பிரதமர் மோடி தனது டுவிட்டர் தளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்து இருந்தார். அதில் அவர், ‘ஜனநாயக திருவிழா மீதான இந்த குறிப்பிடத்தக்க ஆர்வத்துக்காக ஜாம் சாகேப் சத்ருசல்யா சிங்ஜியை நான் பாராட்டுகிறேன். அவரால் ஈர்க்கப்பட்டு, குஜராத் தேர்தல் ஒரு சாதனை வாக்குப்பதிவை காணும் என நம்புகிறேன். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் பேரார்வம் ஏற்படும் எனகருதுகிறேன்’ என குறிப்பிட்டு இருந்தார்.