மும்பை விமான நிலையம் : ஒரே நாளில் நடந்த சோதனையில் ரூ.32 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.!

Scroll Down To Discover
Spread the love

மும்பை விமான நிலையத்தில் ஒரே நாளில் நடந்த சோதனையில் ரூ.32 கோடி மதிப்புள்ள 61 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு, ஒரே நாளில் நடந்த சோதனையில் சிக்கிய அதிகபட்ச தங்கம் இதுவாகும்.

கடந்த வெள்ளிக்கிழமை, தான்சானியா நாட்டில் இருந்து வந்த 4 இந்தியர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர்கள், பெல்ட் மூலம் தங்கம் கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்காகவே, பெல்ட் வடிவமைக்கப்பட்டிருந்தது. அவர்கள் அணிந்திருந்த பெல்ட்டை சோதனை செய்ததில், ஐக்கிய அரபு எமீரேட்சை சேர்ந்த 53 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்களிடம் நடந்த விசாரணையில், தோஹாவில் இணைப்பு விமானத்தில் ஏற வந்த போது சூடானை சேர்ந்த ஒருவர் அந்த பெல்ட்டை கொடுத்தது தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.28.17 கோடி ஆகும். 4 பயணிகளும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பிறகு, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அன்றைய தினம், துபாயில் இருந்து வந்த 3 பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 2 பேர் பெண்கள். பெண்களில் ஒருவருக்கு 60 வயதிருக்கும் என்ற நிலையில் அவர், வீல்சேரில் அமர்ந்து வந்தார். அதில், தங்கத்தை துகள்களாக்கி, ஜீன்ஸ் பேண்ட்டில் வைத்து கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து ரூ.3.88 கோடி மதிப்புள்ள 8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த 3 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.