மண் காப்போம் இயக்கம் சார்பில் கீரை சாகுபடி களப் பயிற்சி – 100-க்கு மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு..!

Scroll Down To Discover
Spread the love

ஈஷாவின் ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் விவசாயிகள் தினந்தோறும் வருமானம் எடுக்க உதவும் கீரை சாகுபடி குறித்த களப் பயிற்சி கோவையில் அக்.29-ம் தேதி நடைபெற்றது. செம்மேட்டில் உள்ள ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் நடைபெற்ற இப்பயிற்சியில் தமிழகம் முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். திண்டிவனத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயியும், பயிற்றுநருமான ருத்ரன் அவர்கள் (My harvest) விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.

சிறிய அளவு நிலம் வைத்திருப்பவர்கள் கூட கீரை விவசாயத்தில் கணிசமான வருமானம் எடுக்க வழிவகை செய்யும் நோக்கில் இந்த பயிற்சி வடிவமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிகழ்வில் கீரை சாகுபடியில் வகுப்பறை மற்றும் செய்முறை களப் பயிற்சி கொடுக்கப்பட்டது. விவசாயிகள் தங்கள் கைகளாலேயே விதைகளை விதைத்தும் நாற்றுகளை நட்டும் அனுபவத்தை பெற்றுக் கொண்டனர். கீரை சாகுபடியில் உர மேலாண்மை மற்றும் இயற்கை வழியில் நோய் கட்டுப்பாடு பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

இந்த பயிற்சியில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களுக்கு முன்னதாகவே கீரை சாகுபடியில் அனுபவம் இருந்தாலும் இந்த பயிற்சியின் மூலம் கீரை சாகுபடியில் தாங்கள் ஏற்கனவே செய்த தவறுகளை திருத்திக் கொள்ள வாய்ப்பு கிடைத்ததாக மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்வின் இறுதியில் பல வகையான கீரைகள் அதன் நன்மைகள் மற்றும் சாகுபடி நுட்பங்களைக் கற்றுக்கொடுத்ததோடு பல கீரை இரகங்களின் விதைகள் மற்றும் நாற்றுக்கள் நடவிற்காக பகிர்ந்து கொள்ளப்பட்டது.