சரிதா நாயர் பலாத்கார புகார் எதிரொலி ; கேரள முதல்வர் வீட்டில் சிபிஐ சோதனை

Scroll Down To Discover
Spread the love

கடந்த 2013-ம் ஆண்டு, கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது, சோலார் ஊழல் வெடித்தது.சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் சோலார் பேனல் அமைத்து தருவதாகவும், தங்கள் நிறுவனத்தில் வர்த்தக கூட்டாளியாக ஆக்கிக் கொள்வதாகவும் ஆசை காட்டி, ஏராளமானோரிடம் முன்பணம் பெற்றனர்.

ஆனால், உறுதி அளித்தபடி அவர்கள் செய்யவில்லை. இந்த ஊழலில் முதல்வர் அலுவலக அதிகாரிகளுக்கும், ஆளும் காங்கிரஸ் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அதில் ஏமாற்றமடைந்த ஒருவர், வழக்கு தொடர்ந்ததால் கோர்ட்டு உத்தரவின்பேரில், முதலில் மாநில போலீசார் இந்த ஊழலை விசாரித்து வந்தனர். 2016-ம் ஆண்டு இடதுசாரி கூட்டணி அரசு வந்த பிறகும் மாநில போலீசாரே விசாரித்து வந்தனர்.

கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பு, முக்கிய குற்றவாளியான சரிதா நாயர், சி.பி.ஐ. விசாரணை கோரி மாநில அரசிடம் மனு கொடுத்தார். அதன்பேரில், சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரை செய்தது. அதையடுத்து, இவ்வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

இவ்வழக்கில், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், முன்னாள் அமைச்சர்கள் அடூர் பிரகாஷ், அனில்குமார், எர்ணாகுளம் எம்.பி. ஹிபி ஈடன், பா.ஜனதா தேசிய துணைத்தலைவர் அப்துல்லா குட்டி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆவர்.

இந்நிலையில் சோலார் வழக்கு தொடர்பாக, திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதல்வர் அதிகாரபூர்வ இல்லத்தில், நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த இல்லம், ‘க்ளிப் ஹவுஸ்’ என்று அழைக்கப்படுகிறது. முதல்வர் பினராயி விஜயன், தற்போது சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள இந்த நேரத்தில், சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் தொழிற்சங்க நிகழ்ச்சிக்காக நேற்று திருவனந்தபுரத்துக்கு வந்த நேரத்தில் சோதனை நடந்தது. சோதனை தொடங்கியவுடன், முக்கிய குற்றவாளியான சரிதா நாயரும் அங்கு வந்தார்.