சென்னை விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டிற்கு அனுப்ப வந்த பார்சல்களை விமான நிலைய சுங்கத் துறையினர் ஆய்வு செய்து கொண்டிருந்தனர். காஞ்சிபுரத்திலிருந்து வெளிநாட்டிற்கு புதிதாக தயாரிக்கப்பட்ட ஒரு மெட்டல் சிலையை அனுப்புவதற்காக சுங்கத்துறையின் அனுமதி கேட்டு, ஒரு விண்ணப்பமும், அந்த சிலைக்கான மெழுகு மாடல் சிலை ஒன்றும் வந்திருந்தது. அதை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து சுங்கத்துறையின் தனிப்படையினர் காஞ்சிபுரத்தில் அந்த குறிப்பிட்ட முகவரிக்கு சென்று சோதனையிட்டனர். அங்கு 5.25 அடி உயரத்தில் 130 கிலோ எடையில் மெட்டல் சிலை ஒன்று இருந்தது. அது புதிய சிலை இல்லை என்றும், மிகவும் பழமையான சிலை என்றும் தெரியவந்தது. உடனடியாக சுங்கத்துறையினார்,அந்த சிலையை பறிமுதல் செய்து, சென்னை விமானநிலைய சுங்கத்துறை அலுவலகம் கொண்டு வந்தனர்.
அதோடு பழங்கால சிலையை ஆய்வு செய்யும் தொல்லியல் துறைக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து சிலையை ஆய்வு செய்தனர். அந்த சிலை 500 ஆண்டு பழமையான விஜயநகர – நாயக்கர் காலத்திய சிலை என தெரியவந்துள்ளது. கணபதியின் பல்வேறு வடிவங்களில் இந்த நர்த்தன கணபதி 15வது வடிவமாக கருதப்படுகிறது.
காஞ்சிபுரத்தில் உள்ள மிகப்பழமையான கோயிலின் சிலையாக இருந்திருக்கலாம். இதை தற்போது வெளிநாட்டிற்கு பல கோடிக்கு விற்பனை செய்வதற்காக எடுக்கப்பட்ட முயற்சி என்றும் தெரியவந்தது. இதையடுத்து சுங்கத்துறை சிலையை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் இந்த சிலையை வெளிநாட்டிற்கு அனுப்ப அனுமதி கேட்ட ஏஜென்சி, சிலை வைக்கப்பட்டிருந்த காஞ்சிபுரம் வீட்டின் உரிமையாளர்கள் உட்பட பல தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் இதைப்போல் பல கோடி ரூபாய் மதிப்புடைய பழங்கால சிலை வெளிநாட்டிற்கு கடத்த முயன்றபோது, பிடிப்பட்டது, இதுவே முதல் முறையாகும்.

														
														
														
Leave your comments here...