கோயில்களில் பக்கதர்களுக்கும், தெய்வத்திற்கும் இடையில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை – சென்னை உயர்நீதிமன்றம்

Scroll Down To Discover
Spread the love

கோவில்களில் பக்தர்களுக்கும், கடவுளுக்கும் இடையில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை,” என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஸ்ரீரங்கம் கோவில் இரண்டாம் பிரகாரத்தில் பக்தர்கள் வலம் வர ஏற்பாடு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த கருத்தை வலியுறுத்தியுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இரண்டாம் பிரகாரத்தில் பக்தர்கள் வலம் வர ஏற்பாடு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (நவ.,1ம் தேதி) நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில், ‛ஸ்ரீரங்கம் கோவில் இரண்டாவது பிரகாரத்தில் வலம் வர ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி பக்தர்களிடம் வெளியிலேயே 500 ரூபாய் வரை இடைத்தரகர்களால் வசூலிக்கப்படுகிறது’ எனக் குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள் ”கோவில்களில் பக்தர்களுக்கும், கடவுளுக்கும் இடையில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை. ஆண்டவன் முன் அனைவரும் சமம். மனுதாரர் குற்றச்சாட்டை மனுவாக அளிக்க வேண்டும். மேலும், அறநிலையத்துறை இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள் வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.