கூடங்குளத்தில் மேலும் ஒரு அணுக்கழிவு மையத்துக்கு மத்திய அரசு அனுமதி – எழும் கண்டனங்கள்!

தமிழகம்

கூடங்குளத்தில் மேலும் ஒரு அணுக்கழிவு மையத்துக்கு மத்திய அரசு அனுமதி – எழும் கண்டனங்கள்!

கூடங்குளத்தில் மேலும் ஒரு அணுக்கழிவு மையத்துக்கு மத்திய அரசு அனுமதி – எழும் கண்டனங்கள்!

தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் ஏற்கனெவே 100க்கும் மேற்பட்ட முறை உற்பத்தி நிறுத்தப்பட்டு மோசமான முறையில் 1000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அணுவுலைகள் இயங்கி வருகின்றன.

தற்போது அந்த வளாகத்திற்குள் மேலும் 1000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட நான்கு அணுவுலைகள் அமைக்கும் பணியை தேசிய அணுமின் சக்திக் கழகம் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.

கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் 3 மற்றும் 4 அணுவுலைகள் செயல்படத் தொடங்கியதும் அவற்றிலிருந்து உண்டாகும் அணுக் கழிவுகளையும் கூடங்குளம் வளாகத்திற்குள்ளாகவே சேமித்து வைப்பதற்கான இடத்தேர்வு அனுமதியை வழங்கியுள்ளது.

இதற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உட்பட பல சமூக ஆர்வலர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகள் அனைத்தையும் அதே வளாகத்திற்குள்ளேயே நிரந்தரமாக சேமித்து வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்ற அச்சங்களை உறுதிபடுத்தும் விதமாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுஉலை தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு தொடுத்த வழக்கில் 2013ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், 15 நிபந்தனைகளின் அடிப்படையில் அணுவுலை செயல்பட அனுமதித்தது. அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே பாதுகாப்பாக வைப்பதற்கான வசதியை 5 ஆண்டுகளில் உருவாக்க வேண்டும் மற்றும் நிரந்தரமாக அணுக்கழிவுகளை பாதுகாப்பாக வைப்பதற்கான ஆழ் நில கழிவு மையம் உருவாக்க வேண்டும் என்பது அதில் முக்கியமான நிபந்தனையாகும்.

5 ஆண்டு கால அவகாசம் 2018 மார்ச் மாதமே முடிந்த நிலையில் மேலும் 5 ஆண்டுகள் கால அவகாசம் வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் கடந்த 2018 பிப்ரவரி மாதம் இந்திய அணுமின் சக்தி கழகம் மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த AFR கட்டமைப்பதில் உள்ள தொழில்நுட்பம் முழுவதுமாக கைவராத நிலையில் அதை அமைப்பதில் சிக்கல்களை சந்தித்து வருகிறோம். அதனால்தான் மேலும் 5ஆண்டுகள் அவகாசம் வேண்டும் எனக் கூறியிருந்தது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் 2022வரைக்கும் கால அவகாசம் அளித்திருந்தது.

முதல் இரண்டு உலைகளின் கழிவுகளை சேமித்து வைப்பதற்கான AFR மையத்தை அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் 2019ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் தேதி நடைபெறும் என தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்தது. ஆனால், இத்திட்டத்திற்கு கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்ததால் நாள் குறிப்பிடாமல் பொது மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது.

தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் மத்திய அரசு செயல்படுவதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.இதற்கிடையே திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்திருந்த அணுசக்தித் துறை இந்தியாவில் அணுக் கழிவுகளை நிரந்தரமாக சேமித்து வைக்கும் ஆழ்நில கழிவு மையம் அமைப்பதற்கான அவசியம் தற்போது எழவில்லை எனத் தெரிவித்திருந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு முற்றிலும் எதிரான இந்த நிலைப்பாடு கூடங்குளத்தில் உருவாக்கப்படும் கழிவுகள் அனைத்தும் நிரந்தரமாக அந்த வளாகத்திற்குள்ளாகவே வைக்கப்பட்டு விடுமோ என்கிற அச்சத்தை உண்டாக்குகிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நிரந்தரமாக அணுக்கழிவுகளை பாதுகாப்பாக வைக்கும் இடத்தை கண்டறியும் வரை கூடங்குளம் அணுவுலையிலிருந்து மேற்கொண்டு மின்னுற்பத்தி செய்யக் கூடாது மற்றும் தற்போது நடந்து வரும் நான்கு உலைகள் அமைக்கும் பணிகளையும் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Leave your comments here...