ஒரு வீடு வைத்திருப்பவர் 4 – 5 கார்கள் வைத்துக் கொள்ள அனுமதிக்கக் கூடாது – மும்பை உயர் நீதிமன்றம்

Scroll Down To Discover
Spread the love

ஒரு வீடு வைத்திருப்பவர் 4 – 5 கார்கள் வைத்துக் கொள்ள அனுமதிக்கக் கூடாது’ என, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நவி மும்பை பகுதியை சேர்ந்த சந்தீப் தாக்கூர் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். அரசின் உத்தரவு காரணமாக பல அடுக்குமாடி குடியிருப்புகளில், வாகன நிறுத்துமிட வசதி இல்லாததால், தெருவோரங்களில் நிறுத்தும் நிலை உள்ளதாக, அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த வழக்கு, மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திபங்கர் தத்தா தலைமையிலான அமர்வில், இன்று விசாரணைக்கு வந்தது. இதில், தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், வாகன நிறுத்துமிட வசதி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர், ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை வைத்திருக்கக் கூடாது என்றும், இதுதொடர்பாக மகாராஷ்டிர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் உத்தரவிட்டனர்.

மேலும், 30 சதவீத சாலைகளின் ஓரப்பகுதி வாகன நிறுத்துமிடமாக மாறியிருப்பதாகவும், நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். ஒருவர் புதிதாக வாகனம் வாங்கும்போதே, அதை நிறுத்திவைப்பதற்கான வசதி உள்ளதா, என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும், என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.