மதுரை ஆதீனத்தின் 292வது குருமகா சன்னிதானம் மறைவு: தலைவர்கள் இரங்கல்

Scroll Down To Discover
Spread the love

மதுரை ஆதீனத்தின் 292வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரி நாத ஸ்ரீ ஞானசம்பந்த அருணகிரிநாதர் மறைவுக்கு தமிழக முதல்வர்.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மதுரை ஆதீன மடத்தின் 292-வது ஆதீனமாக இருந்து வந்தவர், அருணகிரிநாதர். சுவாசக்கோளாறால் அவதிப்பட்டு வந்த அவர், மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உடல் நிலை மோசம் அடைந்தது. இந்த நிலையில் நேற்று இரவில் அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 77.

சைவமும், தமிழும் இரு கண்கள் என்று வாழ்ந்த பெருமைக்குரியவர் மதுரை ஆதீனம். தமிழ்த்தொண்டு, ஆன்மீக தொண்டு மற்றும் சமூக பணிகளில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் ஈடுபட்டு வந்தார். தான் சரி என்று நினைக்ககூடிய அரசியல், சமூக கருத்துகளை முன்வைக்கக் கூடியவர். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், மடாதிபதிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “ஆன்மீகப் பணியிலும் மக்கள் பணியிலும் அருந்தொண்டாற்றி அனைவரின் அன்பிற்கும் உரியவராகத் திகழ்ந்த மதுரை ஆதீனம் திரு. அருணகிரிநாதர் அவர்களின் மறைவுச்செய்தி அறிந்து துயருற்றேன். அன்னாரது மறைவால் வாடும் ஆன்மீகப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்-அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஆன்மீக பெரியவர், பக்திமான், சமூக சிந்தனையாளர், அனைத்து மதத்தவரோடும் அன்பு பாராட்டுபவர், மிகத் தொன்மையான சைவ சமய திருமடங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின் 292 ஆவது குருமகா சன்னிதானமான அருணகிரிநாதர் காலமானார் என்ற செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன், அவரின் இழப்பு தமிழுலகின் பேரிழப்பாகும். ” இவ்வாறு கூறியுள்ளார்.