உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான முந்தைய சமாஜ்வாடி ஆட்சியின்போது ரூ.1,600 கோடியில் கடந்த 2015-ம் ஆண்டு கோமதி நதிக்கரை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
பின்னர் அங்கு பா.ஜனதா ஆட்சி அமைந்ததும், இந்த திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டது. அதாவது வெறும் 60 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ள நிலையில், திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 95 சதவீத பணம் செலவழிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த யோகி ஆதித்யநாத் அரசு பரிந்துரைத்தது. அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு சி.பி.ஐ. முதல் முறையாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
இந்த முறைகேடு தொடர்பாக தற்போது புதிதாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக அப்போதைய நீர்ப்பாசனத்துறை என்ஜினீயர்கள், மேற்பார்வை பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் உள்பட 189 அதிகாரிகள் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதன் தொடர்ச்சியாக உத்தரபிரதேசத்தில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். குறிப்பாக, காசியாபாத், லக்னோ, ஆக்ரா உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 42 இடங்களிலும் ராஜஸ்தானின் அல்வார் மற்றும் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா போன்ற பகுதிகளிலும் வழக்கில் தொடர்புடையவர்களின் இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதிகாலையில் தொடங்கிய இந்த சோதனை நாள் முழுவதும் நடந்தது. இது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், கோமதி நதிக்கரை திட்ட முறைகேடு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது சமாஜ்வாடி கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
Leave your comments here...