மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வாவிடமருதூர் ஊராட்சியில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக 20க்கும் மேற்பட்ட குரங்குகள் தினந்தோறும் காலையும், மாலையும் ஊருக்குள் புகுந்து பெரியோர்கள் மற்றும் சிறுவர்களை அச்சுறுத்தி வந்தது.
மேலும், வீட்டில் இருக்கும் உணவுப் பொருட்கள், தின்பண்டங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு அட்டகாசம் செய்து வந்தது. ஊருக்குள் சுற்றித்திரியும் குரங்குகளை யாராவது விரட்ட நினைத்தால் அவர்களை கடிக்க ஆக்ரோசமாக இந்த குரங்குகள் பாய்ந்து வந்தது.
இப்படி தினந்தோறும், ஊருக்குள் புகுந்து சேட்டை செய்யும் இந்த குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
இதுகுறித்து, கிராம மக்கள் பலரும் ஊராட்சி மன்றத் தலைவரிடம் முறையிட்டனர். 
வாவிடமருதூர் ஊராட்சி மன்றத் தலைவர் திருநாவுக்கரசு இதுகுறித்து, வனத்துறைக்கு தகவல் தெரிவித்து அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்கும்படி கேட்டுக் கொண்டார்.இந்த நிலையில், அங்குள்ள முல்லை பெரியாறு பாசன ஆற்றங்கரையில் உள்ள புளிய மரத்தில் சுற்றி திரியும் இந்த குரங்குகளை பிடிக்க வனத்துறை ஊழியர்கள் இரண்டு கூன்டுகளை அமைத்து அந்த கூன்டுகளில் வாழை பழம், பொரி கடலை உள்ளிட்ட உணவு பொருட்களை வைத்தனர்.
இதை தின்பதற்காக மரத்தில் இருந்து இறங்கிய குரங்குகள் கூண்டுக்குள் வசமாக மாட்டிக் கொண்டன.கடந்த 1 வாரமாக 20-க்கும் மேற்பட்ட குரங்குகளை வனத்துறையினர் பிடித்தனர்.இதனை அறிந்த, கிராம மக்கள் ஊராட்சி மன்றத்  தலைவருக்கும், வனத்துறை ஊழியர்களுக்கும் மனதார நன்றி தெரிவித்தனர். மேலும், இந்த பிடிபட்ட குரங்குகளை மலைப் பகுதிக்கு கொண்டு சென்று விட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
செய்தி: Ravi Chandran

														
														
														
Leave your comments here...