கொரோனா தடுப்பூசிக்கு, ‘லஞ்சம்’ வாங்கிய விவகாரத்தில் மருத்துவமனை ஊழியர்கள் இருவர் கைது.!

Scroll Down To Discover
Spread the love

சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், 23வது வார்டில், மாநகராட்சியின் நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனை உள்ளது. இங்கு, ஏப்ரல் முதல் கோவிட் தடுப்பூசி போடப்படுகிறது.

தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் முதல், தடுப்பூசி இருப்பு இல்லை என பலரை திருப்பி அனுப்பி உள்ளனர். புழல் அடுத்த விநாயகபுரம், கல்பாளையம், சத்தியமூர்த்தி தெருவைச் சேர்ந்த நந்தகோபால், 29, நேற்று காலை, தடுப்பூசி போட்டுக் கொள்ள, அவரது மனைவியுடன் சென்ற போதும், தடுப்பூசி இல்லையென, ஊழியர்கள் கூறியுள்ளனர்.

அவர் வெளியே வந்த போது, அங்குள்ள காவலாளி தினகரன், 42, என்பவர் அவர்களை நெருங்கி, ‘கோவிட்ஷீல்டுக்கு, 500 ரூபாய்; கோவாக்சினுக்கு, 800 ரூபாய் கொடுத்தால், தடுப்பூசி கிடைக்கும்’ என, ரகசியமாக கூறியுள்ளார். இதையடுத்து, நந்தகோபால், அங்குள்ள மற்றொரு ஊழியர் பிரசாத், 18, என்பவரை சந்தித்து பேச, அவரும் பணம் கொடுத்தால் தடுப்பூசி கிடைக்குமென கூறியுள்ளார். இதனால், 300 ரூபாய் ரொக்கமாகவும், 200 ரூபாயை, ‘கூகுள் பே’ மூலமும், நந்தகோபால் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த துண்டு சீட்டு மூலம், அங்குள்ள மருத்துவர், நந்தகோபாலுக்கு, ‘கோவிட்ஷீல்டு’ தடுப்பூசி செலுத்தி உள்ளார்.

தடுப்பூசிக்கு லஞ்சம் வாங்குவதால், அதிருப்தியான நந்தகோபால், அதற்காக நடந்த பேச்சுவார்த்தை மற்றும், ‘கூகுள் பே’ வில், பிரசாத் என்ற ஊழியரின் மொபைல் போனுக்கு, 200 ரூபாய் அனுப்பியதற்கான ‘ஆடியோ, வீடியோ’ ஆதாரங்களுடன், புழல் போலீசாரிடம் புகார் செய்தார். இதனையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.