பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு ஓ.என்.வி., விருது – மலையாள நடிகை பார்வதி எதிர்ப்பு

Scroll Down To Discover
Spread the love

மலையாள கவிஞரும், பாடலாசிரியரும் மற்றும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி., குறுப்புவின் பெயரில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் விருது முதன்முறையாக கேரளாவை சேராத வைரமுத்துவிற்கு வழங்கப்பட உள்ளது.

இந்த விருதினை பெறுவதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலினும் விருது குறித்து தனது வாழ்த்துக்களை வைரமுத்துவிற்கு தெரிவித்தார்.

இந்நிலையில் கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை பார்வதி, பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு ஓ.என்.வி., விருது வழங்கபட உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகை பார்வதி தனது டுவிட்டர் பதிவில்,‛ ஓ.என்.வி., ஐயா எங்கள் பெருமைக்குரியவர். ஒரு கவிஞர் மற்றும் பாடலாசிரியராக அவருடைய பங்களிப்பு யாருடனும் ஒப்பிட முடியாதது. அவரது சிறந்த பணியால் எங்களது இதயங்களும் மனங்களும் பயனடைந்துள்ளது.


ஆனால், பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அவரது பெயரில் விருது வழங்கப்படுவது மிகுந்த அவமரியாதைக்குரியது’ இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். அதே போல் வைரமுத்து மீது பாலியல் குற்றம் சாட்டிய பாடகி சின்மயியும் வைரமுத்துவிற்கு விருது வழங்கப்படுவதை எதிர்த்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.