Mission COVID Suraksha : கொவிட் சுரக்ஷா திட்டத்தின் கீழ் கோவாக்ஸின் உற்பத்தித் திறனை மேம்படுத்த அரசு ஆதரவு

Scroll Down To Discover
Spread the love

தற்சார்பு இந்தியா 3.0-ன் கீழ், உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் கொவிட் தடுப்பு மருந்துகளின் தயாரிப்பை மேம்படுத்துவதற்காக கொவிட் சுரக்ஷா இயக்கம் அறிவிக்கப்பட்டது.

இந்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறையின் மூலம் புதுதில்லியில் உள்ள உயிரித் தொழில்நுட்ப தொழிலக ஆராய்ச்சி உதவி குழுவால் இது செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் கோவாக்ஸின் தடுப்பு மருந்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் திறனை மேம்படுத்துவதற்காக, இந்திய அரசின் உயிரித் தொழில்நுட்பத் துறை நிதி உதவி அளித்தது. இதன் மூலம் 2021 செப்டம்பரில் மாதத்திற்கு 10 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக, ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் லிமிடெட் நிறுவனத்தின் வசதிகள் மற்றும் இதர பொதுத்துறை உற்பத்தியாளர்களின் வசதிகள் ஆகியவை தேவையான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை கொண்டு மேம்படுத்தப்பட்டு வருகின்றன. பாரத் பயோடெக் நிறுவனத்தின் பெங்களூரில் உள்ள புதிய மையத்திற்கு சுமார் ரூபாய் 65 கோடியை இந்திய அரசு வழங்கியுள்ளதன் மூலம், தடுப்பு மருந்து உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில் அது உருவாக்கப்பட்டு வருகிறது.

இதைத் தவிர, கீழ்காணும் மூன்று பொதுத்துறை நிறுவனங்களுக்கும் தடுப்பு மருந்து உற்பத்தித் திறன் மேம்பாட்டுக்காக ஆதரவு வழங்கப் பட்டுள்ளது: ஹப்கைன் பயோ பார்மாசூட்டிகல் கார்ப்பரேஷன் லிமிடெட் – ரூபாய் 65 கோடி, இந்தியன் இம்யுனலாஜிக்கல்ஸ் லிமிடெட் – ரூபாய் 60 கோடி, மற்றும் பாரத் இம்யுனலாஜிக்கல்ஸ் அண்டு பயலஜிக்கல்ஸ் லிமிடெட் – ரூபாய் 30 கோடி.