ஆக்சிஜன் ‘சப்ளை’ தடை – திருப்பதியில் 11 நோயாளிகள் பலி.!

Scroll Down To Discover
Spread the love

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ரூயா அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் ‘சப்ளை’ தடைபட்டதால் 11 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.

திருப்பதியில் உள்ள ரூயா அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சைப் பிரிவில் 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு 5 தீவிர சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. அதில்135 நோயாளிகள் வரை வென்ட்டிலேட்டர் வாயிலாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை 7:30 மணியளவில் வென்ட்டிலேட்டருக்கு வரவேண்டிய ஆக்சிஜன் ‘சப்ளை’ திடீரென தடைபட்டது. இதனால் ஆக்சிஜன் சப்ளை இல்லாமல் நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதில் 11 நோயாளிகள் மூச்சு திணறி உயிரிழந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நோயாளிகளின் உறவினர்கள் ஆத்திரத்தில் மருத்துவமனை கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஆக்சிஜன் சப்ளை குறைய துவங்கியவுடன் ஊழியர்கள் அதை கவனித்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் மூலம் அதை நிரப்பும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ‘கம்ப்ரசர்’ அளவு குறைந்ததால் ஆக்சிஜன் சப்ளை தடைபட்டது. மற்றபடி ஆக்சிஜன் சப்ளை முற்றிலுமாக நிற்கவில்லை.

இந்த சம்பவத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். 13க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவமனை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.