கொரோனா பரவலை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை : 11 முதல் 14ம் தேதி வரை தடுப்பூசி விழா – மாநிலங்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

Scroll Down To Discover
Spread the love

இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா நோய்த் தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன. சில நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு, வார இறுதி நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா ஹாட்ஸ்பாட் மாநிலங்களில் இருந்து வரும் மக்களுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.முகக்கவசம், சரீர விலகல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொது மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், கொரோனா பரவல் தொடர்பாக, மாநில முதல்வர்களுடன் காணொளிக் காட்சி வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். இரண்டு நாட்களுக்கு முன்னர், மாநில முதல்வர்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், பிரதமர் மோடி இந்த ஆலோசனையை மேற்கொண்டார்.


அதில் அவர் பேசியதாவது:- கொரோனா பரவலின் வேகம், நாட்டில் மீண்டும் சவாலான சூழ்நிலை உருவாகி வருகிறது. கொரோனா 2வது அலையை நாம் ஒன்றாக இணைந்து போராட வேண்டும். கொரோனா பாதிப்பின் அபாயம் புரியாமல், மக்கள் அலட்சியமாக இருக்கின்றனர். பல்வேறு மாநில அரசுகளும் கவலை இல்லாமல் மிகவும் சாதாரணமாக உள்ளன. கொரோனாவை எதிர்த்து மீண்டும் போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


அதன் பரவலை தடுக்க, பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும். 70 சதவீதத்துக்கு ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனை செய்வதே நமது இலக்கு. தற்போதைய ஆபத்தை தடுப்பதற்கு, மாநில முதல்வர்கள் அடுத்த 2 முதல் 3 வாரங்களுக்கு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். இம்மாதம் 11 முதல் 14ம் தேதி வரையில், தடுப்பூசி விழாவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதில், தகுதி உள்ள அனைவருக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும். பரிசோதித்தல், கண்டறிதல், சிகிச்சை அளிப்பது ஆகியவையே கொரோனாவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்.

இரவு நேர ஊரடங்கை ‘கொரோனா ஊரடங்கு’ என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இந்த ஊரடங்கானது இரவு 9 மணி முதல் அதிகாலை வரை இருந்தால் நல்லது. இவ்வாறு மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி பேசியுள்ளார். கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த குறைந்தப்பட்சம் 30 பேரையாவது 72 மணி நேரத்துக்குள் கண்டறிந்து பரிசோதனை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.