உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம்.? மத்திய சட்ட அமைச்சகம் தலைமை எஸ்.ஏ.பாப்டேவுக்கு கடிதம்.!

Scroll Down To Discover
Spread the love

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தற்போதுள்ள எஸ்.ஏ.பாப்டே, அடுத்த மாதம் 23ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியை நியமிப்பதற்கான நடைமுறையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

இதன்படி, புதிய தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என்ற பரிந்துரையை அளிக்கும்படி எஸ்.ஏ.பாப்டேவுக்கு மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று முன்தினம் கடிதம் எழுதியுள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனத்தில் மரபுப்படி சில நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஓய்வு பெறும் தலைமை நீதிபதி, தனக்கு அடுத்ததாக யாரை அப்பதவியில் நியமிக்கலாம் என்ற பரிந்துரையை மத்திய அரசுக்கு தெரிவிப்பது வழக்கம். தனக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதியை தலைமை நீதிபதி பரிந்துரை செய்வார். அவர் தகுதியானவராக இருந்தால், அவரையே தலைமை நீதிபதியாக நியமிக்கும்படி ஜனாதிபதிக்கு பிரதமர் பரிந்துரை செய்வார். அதை ஏற்று, ஜனாதிபதியும் நியமன உத்தரவை பிறப்பிப்பார்.

ஆனால், இப்பதவிக்கு பரிந்துரை செய்யப்படுபவர் அதற்கு தகுதியானவராக இல்லாத பட்சத்தில், அடுத்ததாக யாரை நியமிக்கலாம் என்பது பற்றி உச்ச நீதிமன்றத்தின் மற்ற நீதிபதிகளுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும். உச்ச நீதிமன்றத்தில் தற்போது எஸ்.ஏ.பாப்டேவுக்கு அடுத்த நிலையில், மூத்த நீதிபதியாக என்.வி.ரமணா இருக்கிறார். எனவே, இவரே அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 1957ம் ஆண்டு, ஆகஸ்ட் 27ம் தேதி பிறந்த இவருடைய பதவிக் காலம், 2022, ஆகஸ்ட் 26ம் தேதி வரையில் உள்ளது.