சென்னை விமான நிலையத்தில் 49.6 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது

Scroll Down To Discover

சென்னை விமான நிலையத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 972 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

துபாயில் இருந்து சென்னை வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த தகவலையடுத்து, சுங்க அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

பிளை துபாய் விமானத்தில் வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த சபிவுல்லா அப்துல் வாகித், சகாப்தீன் சாபர் சதிக் ஆகியோரிடம் சோதனை நடத்தப்பட்டது. இவர்கள் தலா ஒரு தங்கப் பசைப் பொட்டலங்களை ஆசனவாயில் மறைத்து வைத்துக் கடத்தி வந்திருந்தனர். அந்தத் தங்கப் பசையிலிருந்து 182 கிராம் தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு 9.4 இலட்சம்.


இன்டிகோ விமானத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த ராவுத்தர் என்ற பயணியிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவரது கால் சட்டைப் பையில் இருந்து 49 கிராம் தங்கத் துண்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2.5 இலட்சம். மேலும், அவர் மூன்று பொட்டலம் தங்கப் பசையை தனது ஆசன வாயில் மறைத்து வைத்திருந்தார்.

அதிலிருந்து 741 கிராம் தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.37.7 இலட்சம். இவர் கைது செய்யப்பட்டார்.கைப்பற்றப்பட்ட 972 கிராம் தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.49.6 இலட்சம் என சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.