உலகப் புலிகள் தினம் : இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு பற்றிய விரிவான அறிக்கை வெளியிட்ட மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர்..!

இந்தியா

உலகப் புலிகள் தினம் : இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு பற்றிய விரிவான அறிக்கை வெளியிட்ட மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர்..!

உலகப் புலிகள் தினம் : இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு பற்றிய விரிவான அறிக்கை வெளியிட்ட மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர்..!

உலகப் புலிகள் தினத்தை முன்னிட்டு, டெல்லியில் இன்று புலிகள் கணக்கெடுப்பு பற்றிய விரிவான அறிக்கையை வெளியிட்டார் மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.

இதில் பேசிய மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “புலிகள் இயற்கையின் ஒருங்கிணைந்த அங்கம் என்பதோடு, இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, இயற்கையின் சமநிலையைப் பிரதிபலிக்கிறது” என்றார்.


சர்வதேச அளவில் இந்தியா வெளிப்படுத்தி வரும் மென்மையான போக்கின் ஒரு வகை தான் புலிகள் மற்றும் பிற வன உயிரினங்கள், என்று திரு.பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். குறைந்த அளவிலான நிலப்பரப்பு போன்ற பல்வேறு தடைகள் இருப்பினும், இந்தியாவின் உயிர்ப்பன்மை 8 சதவீத அளவிற்கு உள்ளதாகவும், இயற்கை, மரங்கள் மற்றும் வன உயிரினங்களைப் போற்றிப் பாதுகாக்கும் கலாச்சாரம் நம் நாட்டில் இருப்பது தான் இதற்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார். வன உயிரினங்கள் இயற்கை நமக்கு அளித்த சொத்து என்று கூறிய பிரகாஷ் ஜவடேகர், உலகில் உள்ள புலிகளின் மொத்த எண்ணிக்கையில் 70 சதவீதம் இந்தியாவில் இருப்பது பெருமைக்குரியது என்றார். புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, புலிகள் அதிகம் வசிக்கும் 13 நாடுகளுடன் இணைந்து இந்தியா அயராது பாடுபட்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டார்.

விலங்குகளின் உயிரிழப்புக்குக் காரணமான மனிதன் – விலங்குகள் மோதலால் ஏற்படும் சவாலை எதிர்கொள்ள, விலங்குகளுக்குத் தேவையான தண்ணீர் மற்றும் தீவனங்கள், வனப்பகுதிகளிலேயே கிடைக்கச் செய்வதற்கான திட்டத்தை செயல்படுத்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஜவடேகர் குறிப்பிட்டார். இதற்காக, முதன்முறையாக, லிடார் (LIDAR) அடிப்படையிலான கணக்கெடுப்புத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. லிடார் என்பது, தொலைவை அளப்பதற்கு லேசர் ஒளியைப் பாய்ச்சி இலக்கை ஒளியூட்டச் செய்து, தொலையுணர் கருவியின் மூலம் பிம்பத்தை அளவிடுவதாகும்.


புலிகளின் முக்கியமான இயல்பை விளக்கும் வகையில், புலிக்குட்டிகள் பற்றிய சுவரொட்டியையும் மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் வெளியிட்டார். இந்தியாவில் உள்ள புலிகளில் சுமார் 30சதவீதம், புலிகள் சரணாலயங்களுக்கு வெளியே உள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள 50 புலிகள் சரணாலயங்களுக்கும் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ள, உலகளவில் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு உத்தரவாதம் | புலிகள் நிலை பற்றிய செயல்திட்டம் (CA|TS) ஆகியவை மூலம் மேலாண்மைத் தலையீடுகளை மதிப்பிட இந்தியா திட்டமிட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுற்றுச் சூழல்துறை இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ:- மனிதர்களுக்கும் விலங்களுக்கும் இடையேயான மோதலைத் தவிர்க்கலாம் என்றும், இந்தியாவில் அதற்கான வாய்ப்பை மறுக்க முடியாது என்றும் கூறினார். நாட்டில் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் முன்கள அதிகாரிகளின் சிறப்பான பணியையும் அவர் பாராட்டினார்.

4-வது அகில இந்தியப் புலிகள் கணக்கெடுப்பு பற்றிய விரிவான ஆய்வறிக்கை, கீழ்க்காணும் வகையில் தனித்துவம் வாய்ந்தது ஆகும்

•இதுவரை வசிப்பிடங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இணை வேட்டையாடுபவர்கள் மற்றும் பிற உயிரினங்களின் குறியீட்டு எண் அதிகளவில் உள்ளது

•முதன்முறையாக, புலிகள் சிக்கக்கூடிய இடங்களில் பொருத்தப்பட்ட அனைத்து கேமராக்கள் வாயிலாக புலிகளின் பாலின வீதம் கணக்கெடுக்கப்பட்டுள்ளது

•புலிகளின் எண்ணிக்கை பற்றிய மானுடவியல் விளைவுகள் விரிவான முறையில் விளக்கப்பட்டுள்ளன

•புலிகள் சரணாலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது முதன்முறையாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

புலிகள் அதிகம் வசிக்கும் நாடுகளின் தலைவர்கள், ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கூடி, புலிகள் பாதுகாப்பு பற்றிய செயின்ட் பீட்டர்ஸ்பர்க் உடன்படிக்கையில் கையெழுத்திட்டதன் வாயிலாக, 2022ஆம் ஆண்டுக்குள் உலகளவில் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க உறுதி பூண்டுள்ளனர். மேலும், ஆண்டுதோறும் ஜுலை 29-ஆம் தேதியை உலகப் புலிகள் தினமாக, உலகெங்கும் கொண்டாட முடிவு செய்யப்பட்டதிலிருந்து, புலிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கொண்டாடப்பட்டு வருகிறது.

2019-ஆம் ஆண்டு உலக புலிகள் தினத்தின்போது, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் உறுதியான செயல்பாடு காரணமாக, திட்டமிட்டதற்கு 4 ஆண்டுகள் முன்னதாகவே, இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை இருமடங்கு அதிகரித்துள்ளதை அறிவித்ததன் மூலம், இந்தியாவின் உறுதிப்பாட்டை நமது பிரதமர் உலகிற்குப் பறைசாற்றினார்.

இந்தியாவில் தற்போது புலிகளின் எண்ணிக்கை 2,967-ஆக உள்ளது; இது, உலகின் மொத்த புலிகள் எண்ணிக்கையில் 70 சதவீதம் ஆகும். கேமரா ஆதாரத்துடன் கூடிய வன உயிரினக் கணக்கெடுப்பு நடத்த நாடு மேற்கொண்ட முயற்சிகளால், கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் கிடைத்திருப்பது, இந்தியாவின் மகுடத்தில் மற்றொரு சிறப்பாக அமைந்துள்ளது.

Leave your comments here...