2500அடி உயரத்தில் உள்ள ஆனைக்கல்மலை சாஸ்தா குகை கோவில் : பக்தர்களின் கோரிக்கை கண்டுகொள்ளுமா அரசு…?

ஆன்மிகம்தமிழகம்

2500அடி உயரத்தில் உள்ள ஆனைக்கல்மலை சாஸ்தா குகை கோவில் : பக்தர்களின் கோரிக்கை கண்டுகொள்ளுமா அரசு…?

2500அடி உயரத்தில் உள்ள ஆனைக்கல்மலை சாஸ்தா குகை கோவில் : பக்தர்களின் கோரிக்கை கண்டுகொள்ளுமா அரசு…?

கன்னியாகுமரி மாவட்டம் என்றாலே உடனே ஞாபகத்திற்கு வருவது முக்கடலும் சங்கமிக்கும் அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில், விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையும் தான். ஆனால் பலரும் அறிந்திட வகையில் பல சிறப்பு மிக்க கோவில் உண்டு. அதில் ஒன்று தான் 2500அடி உயரத்தில் உள்ள ஆனைக்கல் மலை சாஸ்தா குகை கோவில். தோட்டியோடு- சுங்கான்கடை பகுதி அருகே மலையின் மீது அமைந்த சிறப்பான ஒரு சிறிய குடைவரை கோவில்தான் இந்த ஆனைக்கல் மலை சாஸ்தா கோவில்.இந்த கோவில் அமைந்திருக்கும் பெரிய பாறையானது கீழே இருந்து பார்க்கும் போது யானை படுத்திருப்பது போல தோற்றம் அளிப்பதால் இந்த மலை ஆனைக்கல்மலை என அழைக்கப்படுகிறது. ஆனைக்கல் சிவன்மலை என்ற பெயராலும் அறியபடுகிறது.

சாஸ்தா என்றால் ஆளுபவன் என்று பொருள். ‘தர்மஸ்ய சாஸனம் கரோதி இதி தர்ம சாஸ்தா’தர்மத்தை நிலைநாட்டும் பகவானாக ஐயப்பன் இருப்பதால், அவரை தர்மசாஸ்தா என்று அழைக்கிறோம். இந்த கோவிலில் தர்மசாஸ்தா மூவராக அமைந்து காட்சி தருகிறார்.இந்த கோவிலை பற்றி இணையத்தில் தேடினால் எந்த தகவலும் கிடைக்காது. எந்த காலத்தில் இந்த கோவில் அமைக்கப்பட்டது யாரால் கட்டபட்டது என்பதற்காக சரியான தகவல் எதுவும் இல்லை. குடைவறைகோவிலாக இருப்பதினால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டபட்டதாக இருக்கும் என நம்மபடுகிறது.

ஆனைக்கல்மலை சாஸ்தாகோவிலின் முன்புறம்.

இக்கோவில் தரையில் இருந்து மீது சுமார் 2500அடிக்கு மேல் மலையில் இந்த கோவில் அமைக்கபட்டுள்ளது . கீழே இருந்து ஒற்றையடி பாதையில் நடந்து மட்டுமே கோவிலுக்கு செல்ல முடியும். செல்லும் வழியும் சீரான பாதையாக இல்லாமல் கரடுமுரடாக அமைந்திருக்கும் செல்லும் வழியில் முட்செடிகளும் நிறைய மரங்களும், மூலிகை செடிகளும் அமைந்து காணப்படும்.காட்டு பன்றிகளும், குரங்குகளும் வழியில் தென்படும்.கோடைகாலத்தில் வெயில் தெரியாத அளவிற்கு குளிர்ச்சியாக அமைந்திருக்கும் மேலே மலையில் இருந்து வரும் சுனை நீரும் ஊற்று நீரும் ஆங்காங்கே காணப்படும். நடந்து செல்ல 2-3மணி நேரம் வரை ஆகும். ஓய்வு எடுக்காமல் ஒன்னரை மணி நேரத்தில் விரைவாக நடந்து கோவிலை அடைபவர்களும் உண்டு.

கோவில் உள்ளே ஸ்ரீ விநாயகர், நாகராஜா பூவத்தான்சாமி ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். வலது புறம் சாஸ்தா அழகிய தோற்றத்தில் கையில் தாமரை மலருடன் இடதுகாலை மடித்து வலதுகாலை தொங்கவிட்டு நிலையில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். சாஸ்தாவின் தலையில் கீரிடமும் கழுத்தில் பூமாலையும் உள்ளது.இடுப்பையும் முழங்காலையும் சேர்த்து கட்டி யோகபட்டம் காணப்படுகிறது.சாஸ்தாவின் முன்பு 4 அடி உயர இரண்டு கல் விளக்குகள் உள்ளது.இதில் பக்தர்களால் விளக்கேற்றபடுகிறது. குகைகோவிலாக இருப்பதினால் உள்ளே மிக குளிர்ச்சியாக இருக்கிறது. சாஸ்தா தலையில் எல்லா காலநிலையிலும் நீர் சொட்டு சொட்டாக விழுந்து கொண்டே இருப்பது அதிசயமாகும்.

பக்தர்களின் அலங்கார தோற்றத்தில் ஆனைக்கல்மலை சாஸ்தா, சிவலிங்கம்.

கோவிலின் குகை வெளியே மாடன் போன்ற காவல் தெய்வங்களும் காணப்படுகிறது. மேலே ஒரு மரத்தடியில் சிறிய சிவலிங்கமானது நந்தி வாகணத்துடன் அமைப்பட்டுள்ளது.இந்த கோவிலில் தனியே பூசாரியோ பூஜை செய்ய ஆளோ இல்லை இங்கு வரும் பக்தர்களே அபிஷேகம் ,அலங்காரம் செய்து பிரசாதம் படைத்து தீபாராதனை செய்து ஐயனை வணங்குகின்றனர். சமைக்கும் பொருள்கள் வாங்கி வந்து சமையல் செய்தும் சாப்பிடலாம். மலை உச்சியில் சுவையான குளிர்ச்சியான நீர்சுனைகள் மூன்று இருக்கிறது.வெகு காலத்திற்கு முன்பு வரை ஒரு துறவி இந்த கோவிலிலே வசித்து வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி கொண்டிருந்தார் பின்னர் அவர் எங்கு சென்றார் என யாருக்கும் தெரியவில்லை.

ஆனைக்கல் சிவன் மலையில் வசித்து வந்த துறவி.

சபரிமலை விரத காலத்தில் இந்த கோவிலில் இரவில் ஐயப்ப பக்தர்கள் தங்குவார்கள். சில பக்தர்கள் சபரிமலை தரிசனம் முடிந்து இந்த ஆனைக்கல்மலை சாஸ்தா கோவில் வந்து மாலை கழற்றி விரதம் முடிப்பார்கள்.பரசேரி, கருப்புகோடு ,தோட்டியோடு மற்றும் சுற்றுவட்டார மக்கள் அடிக்கடி இந்த கோவிலுக்கு வந்து பூஜைகள் செய்வது வழக்கம். பெண்களும் குடும்பத்தினருடன் இந்த ஆனைக்கல் மலை சாஸ்தாவை தரிசிக்க வருகைதருவார்கள். காட்டுப்பாதை வழியே மலை உச்சியில் ஆன்மீக பயணம் செய்ய விரும்பும் பக்தர்கள் நிச்சயம் இந்த கோவிலை தரிசனம் செய்யலாம்.

கார்த்திகை தீபத்தின் போது திருவண்ணாமலை மலையில் தீபம் ஏற்றுவது போல் தை 1ம் தேதி பொங்கல் பண்டிகையின் போது இந்த மலையில் பரசேரி இளைஞர்களால் பல வருடங்களாக ஏற்றபடுகிறது. மலை மேல் அந்த தீப ஓளி சுற்றி உள்ள பல ஊர்களில் அழகாக தெரியும். கன்னியாகுமரி மாவட்டதில் கிட்டதட்ட எல்லா மலைகளையும் + நாட்டி மொத்தமாக ஆக்கிரமித்து விட்டனர். எஞ்சியுள்ள இதே போன்ற மலைகோவில்கள் பாதுகாக்கபட வேண்டும்.

பக்தர்கள் ஆனைக்கல்மலை கோவிலுக்கு பயணம் செய்து பூஜை செய்த சிறு காணொளி தொகுப்பு:-

எனவே தமிழக அரசு இதனை கருத்தில் கொண்டு ஆனைக்கல்மலை சாஸ்தா கோவிலை பாதுக்கவேண்டுமென கன்னியாகுமரி மக்கள் கோரிக்கை விடுத்தது வருகிறார்கள். மேலும் இந்த கோவிலை பாதுகாக்க ஒரு அமைப்பு அல்லது டிரஸ்ட் தொடங்கி வாரம் ஒரு முறையாவது பூஜைகள் நடைபெற வேண்டும்.பங்குனி உத்திரத்தின் போது சிறப்பு பூஜை நடத்தபட வேண்டும். கோவிலுக்கு செல்லும் பாதைகள் சீரமைக்க வேண்டும். கோவில் வளாகத்தை சுத்தமாக்க வேண்டும். குறிப்பாக கோவிலுக்கு பணஉதவி பொருளுதவி செய்ய நிறைய ஐயப்பபக்தர்கள் முன்வருவார்கள் என கூறப்படுகிறது. பல ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆனைக்கல்மலை சாஸ்தா கோவிலை, புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கன்னியாகுமரி மாவட்ட அனைத்து சமுதாய இந்து மக்களும் கூறி வருகிறார்கள்.


Gokul Psv
Social Activist

Leave your comments here...