கொரோனா வைரசிற்கு எதிரான போர்க்களத்தில் திருநங்கைகளின் மனிதநேயம் – குவியும் பாராட்டுகள்..!!!

இந்தியாதமிழகம்

கொரோனா வைரசிற்கு எதிரான போர்க்களத்தில் திருநங்கைகளின் மனிதநேயம் – குவியும் பாராட்டுகள்..!!!

கொரோனா வைரசிற்கு எதிரான போர்க்களத்தில் திருநங்கைகளின் மனிதநேயம் – குவியும் பாராட்டுகள்..!!!

திருநங்கைகள் – ஆண்பாலாகவும் இல்லாமல் பெண்பாலாகவும் இல்லாமல் மூன்றாம் பாலினமாக இருப்பவர்கள். அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான். நம்மோடு இருப்பவர்கள்தான். ஆனால் பொது சமூகத்தில் இருந்து மிகவும் அந்நியப்பட்டு போய் இருக்கின்றார்கள். குடும்பத்தோடும் அன்பான உறவு இல்லை; சமுதாயத்தோடும் தொடர்பு இல்லை. ஒதுக்கப்பட்டுள்ள, ஒதுங்கியுள்ள இந்த திருநங்கைகள் தங்களின் அன்றாட வாழ்வை நடத்துவதற்கே திண்டாடிப் போய் உள்ளனர்.அரசாங்கத்தின் பார்வையும் பொது சமூகத்தின் அக்கறையும் இன்னமும் முழுமையாக இவர்கள் மீது படியவில்லை. விளிம்புநிலை மனிதர்களாகவே திருநங்கைகள் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றார்கள்.

கொரோனா வைரஸ் தொற்று நோயானது பாரபட்சம் பார்க்காமல் அனைவரையுமே பாதித்துள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் என்றால் அதைவிடவும் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் இந்தத் திருநங்கைகளே ஆவர். பெரும்பாலான திருநங்கைகள் தங்களின் வயிற்றுப்பாட்டுக்காக யாசகத்தையே நம்பி உள்ளனர். ஊரடங்கு நிலையில் மனிதர்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து வரும் இந்தச் சூழலில் இவர்கள் என்னதான் செய்ய முடியும் ?

புதுச்சேரியில் சகோதரன் சமூக நல மேம்பாட்டு நிறுவனம் திருநங்கைகள் மற்றும் பாலின சிறுபான்மையினர் நல்வாழ்வுக்காக பாடுபட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தை டாக்டர் ஷீத்தல் நாயக் தலைவராக இருந்து நடத்தி வருகிறார். கொரோனாவால் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு புதுச்சேரி மாவட்டத்தில் 68 பாலின சிறுபான்மையினர் மிகவும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளதை இந்த நிறுவனம் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களை வழங்கி உள்ளது. சமுதாயத்தின் மேல் அக்கறையுள்ள திருநங்கைகள் பலரும் சகோதரன் நிறுவனத்துடன் சேர்ந்து கொரோனா தொற்றிவிடுமோ என்ற பயத்தையும் மீறி தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள நகராட்சிப் பணியாளர்களுக்கு முகக்கவசங்கள், பானங்கள், நொறுக்குத் தீனிகளை வழங்கி உள்ளனர். தங்கள் நிலையே மோசமாக உள்ள நிலையில் திருநங்கைகளின் இந்தச் சேவை பலரின் பாராட்டையும் பெற்று உள்ளது.

புதுச்சேரி அரசின் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையானது 123 திருநங்கைகளை ஒருங்கிணைத்து 12 சுயஉதவிக் குழுக்களை உருவாக்கி உள்ளது. கொரோனா போராட்டத்துக்கு உதவும் வகையில் இந்த சுயஉதவிக் குழுவினர் கைகழுவும் சேனிடைசர்களைத் தயாரித்து வழங்கி வருகின்றனர்.

சகோதரன் அமைப்பின் தலைவர் டாக்டர் ஷீத்தல் நாயக் புதிய முயற்சியாக காவல்துறை உயரதிகாரிகளுடன் பேசி விருப்பப்பட்ட திருநங்கைகளை காவல்துறைத் தன்னார்வலர்களாக கொரோனா போராட்டக் களத்தில் ஈடுபடுத்தி உள்ளார். இந்தத் திருநங்கைகள் புதுச்சேரி, பாகூர், அரியாங்குப்பம் பகுதிகளில் மக்களுக்கு சேனிடைசர் கொடுத்து கைகழுவ உதவுகின்றனர். மேலும் மக்களை முகக்கவசம் அணியவும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்துகின்றனர். காவல்துறையினரோடு இணைந்து கூட்டம் சேராமல் பார்த்துக் கொள்கின்றனர்.

புதுச்சேரி புது பேருந்து நிலைய காய்கறிச் சந்தையில் காவல்துறை தன்னார்வலராக ஈடுபட்டுள்ள திருநங்கைகள் ருக்ஷானா மற்றும் ரம்யா இருவரும் சமுதாயத்துக்கு ஓரளவாவது சேவை செய்ய வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சியைத் தெரிவித்ததோடு அரசு தங்களுக்கு ஹோம்கார்டு போன்ற வேலைகளைக் கொடுத்தால் தங்களின் வாழ்க்கைக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்றனர். இதே போன்று பாகூரில் சேவையில் ஈடுபட்டுள்ள திருநங்கைகள் டயானா மற்றும் ஏஞ்சல் இருவரும் `காவல்துறை அறிவிப்புகளை மக்கள் கடைபிடிக்க நாங்கள் உதவுகின்றோம். எங்களை இந்தப் பணியில் ஈடுபடுத்திய அரசுக்கு நன்றி. சேவை சார்ந்த அரசுப் பணிகளில் எங்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்தால் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம்’ என்றனர்.

சகோதரன் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஷீத்தல் நாயக் பொது சமுதாயம் எங்களை ஒதுக்கி வைத்திருந்தாலும் இந்தக் கொரோனா தொற்றுக் காலத்தில் பலரும் எங்களுக்கு உணவும், உதவிப் பொருட்களும் வழங்க முன்வந்துள்ளனர். மக்களோடு மக்களாக இணைவதற்கான வாய்ப்பையும் மக்களுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பையும் இந்தக் கொரோனா காலகட்டம் எங்களுக்கு வழங்கி உள்ளது. இப்பொழுது அரும்பியுள்ள இந்தப் பொதுச் சமூக உறவானது நீடித்து வலுப்பெற வேண்டும் என்று விரும்புகிறோம் எனத் தெரிவித்தார்.திருநங்கைகளும் நம் சமுதாயத்தில் கண்ணியமான வாழ்க்கையை வாழ நாம் அனைவருமே ஒத்துழைக்க வேண்டும். அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள் என்று உணர்ந்து பாகுபாடு காட்டாமல் நடத்துவதுதான் முதல்படியாகும். கொரோனா காலகட்டத்தில் நோயைத் தாண்டி நாம் அந்த முதல் படியை எடுத்து வைப்போம்.

Leave your comments here...