நெருங்கி வரும் தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம்:  பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு.!

சமூக நலன்

நெருங்கி வரும் தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம்:  பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு.!

நெருங்கி வரும் தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம்:  பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு.!

தஞ்சாவூர் பெரிய கோவிலில், பிப்ரவரி, 5ல், கும்பாபிஷேகம் செய்வதற்கான திருப்பணிகள், முழுவீச்சில் நடந்து வருகின்றன. மேலும், விமான கோபுரத்தில் பிரதிஷ்டை செய்யும் கலசங்களுக்கு, தங்க முலாம் பூசும் பணி நடக்கிறது.நந்தி மண்டபம் முன், புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்வதற்காக, 40 அடி உயரத்துக்கு பர்மா தேக்கு மரம் வாங்கப்பட்டுள்ளது. நேற்று காலை, கோவிலுக்கு வந்த கலெக்டர் கோவிந்தராவ், கும்பாபிஷேக முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார்.கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்லும் வழி, கோபுரங்களுக்கு புனித நீர் கொண்டு செல்லும் பாதை, கோபுர கலசங்களுக்கு தங்க முலாம் பூசும் பணி, புதிய கொடிமரம் ஆகியவற்றை பார்வையிட்டார். தொடர்ந்து, கூட்ட நெரிசல் இல்லாமல் கும்பாபிஷேகத்தை நடத்துவது பற்றி, அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும் கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக மாநகராட்சி சார்பில் 100 இடங்களில் குடிநீர் வசதி செய்யப்படுகிறது. பெரியகோவில் வளாகத்தில் 20 இடங்களிலும், கோவிலை சுற்றியுள்ள வீதிகள் மற்றும் கார் நிறுத்தும் இடம், தற்காலிக பஸ் நிறுத்தும் இடம் ஆகிய இடங்களிலும் குடிநீர் வசதி செய்யப்படுகிறது. மக்கள் கூட்டம் அதிகமான பகுதிகள், நடந்து செல்லும் சாலையின் ஓரம் என 200 இடங்களில் தற்காலிக கழிவறைகள் வைக்கப்பட உள்ளன. மேலும் நகரில் பல இடங்களில் மின் அலங்காரம் செய்யப்பட இருக்கிறது.

முன்னதாக தஞ்சை பெருவுடையார் கோவில் திருக்குடமுழுக்கு விழாவை, தமிழில் நடத்த வேண்டும்’ என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அரசுக்கு கோரிக்கையும் விடுத்து உள்ளார்.

தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், நந்தி பெருமான் ஆகிய சன்னதிகளுக்கு முன்பு கொடிமரம் அமைந்துள்ளது. 17 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட இந்த கொடிமரம் தேக்கு மரத்தால் ஆனது. இந்த கொடிமரத்தை சுற்றிலும் உலோகம் பொருத்தப்பட்டு இருந்தது. தற்போது பெரியகோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி கொடிமரத்தில் சுற்றி இருந்த உலோகம் கழற்றப்பட்டு பாலீஷ் போடப்பட்டு வருகிறது.

இந்த கொடிமரத்தின் பீடம் மட்டும் 5 அடி உயரம் கொண்டது. அதற்கு மேல் 28 அடி உயரத்தில் கொடிமரம் இருந்தது. கொடிமரத்தின் அடிப்பகுதியில் சேதமடைந்து இருந்ததால் அந்த கொடிமரம் அகற்றப்பட்டது. இதற்கு பதிலாக புதிய கொடிமரம் வாங்குவதற்காக பல்வேறு ஊர்களுக்கு அதிகாரிகள் சென்றனர்.சென்னையில் பர்மா தேக்கு மரக்கட்டையை ரூ.9 லட்சத்திற்கு அதிகாரிகள் வாங்கினர். இந்த மரக்கட்டை சென்னையில் இருந்து லாரி மூலம் திருச்சி திருவெறும்பூரில் உள்ள மரஅரவை ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டு அறுக்கப்பட்டது. தற்போது 40 அடி உயரத்தில் உள்ள மரக்கட்டை லாரி மூலம் தஞ்சை பெரியகோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த ஆய்வின் போது தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே,எஸ்.பி., மகேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Leave your comments here...