என் தந்தைக்கு, தாய் எழுப்பிய அன்புக்கோட்டை – கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் உருக்கம்..!

தமிழகம்

என் தந்தைக்கு, தாய் எழுப்பிய அன்புக்கோட்டை – கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் உருக்கம்..!

என் தந்தைக்கு, தாய் எழுப்பிய அன்புக்கோட்டை –  கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் உருக்கம்..!

என்னைப் பொறுத்தவரையில், என் தந்தைக்கு என் தாய் எழுப்பிய அன்புக் கோட்டையாகவே நான் இதை கருதுகிறேன்” என்று கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு, திமுக மற்றும் தமிழக அரசு சார்பில் ஓராண்டு காலத்துக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதையொட்டி, கருணாநிதி பிறந்த திருவாரூரில், தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் மற்றும் நூலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடியில் 7,000 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

கலைஞர் கோட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது சகோதரி செல்வி செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டார். உடல் நலக் குறைவு காரணமாக பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

முன்னதாக, விழாவில் பங்கேற்பதற்காக தேஜஸ்வி யாதவ் சிறப்பு விமானம் மூலம் திருச்சி வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் வந்த அவரை, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஸ் ஆகியோர் வரவேற்றனர்.

திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது. பின்னர் பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: “நெஞ்சில் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் நிறைந்திருக்கக் கூடிய நிலையில் உங்கள் முன்பு நான் நின்றுகொண்டிருக்கிறேன். வான்புகழ் வள்ளுவருக்கு தலைநகரில் கோட்டம் கண்ட, தலைவர் கருணாநிதிக்கு திருவாரூரில் கோட்டம் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. தனது 13 வயதில் எந்த திருவாரூர் வீதிகளில், போர்பரணி பாடி வந்தாரோ, அதே திருவாரூரில் கலைஞருக்கு கோட்டம் எழுப்பப்பட்டுள்ளது.

அண்ணாவை தலைவர் கருணாநிதி முதன்முதலில் சந்தித்த ஊர் இந்த திருவாரூர். தலைவராக பிற்காலத்தில் ஆனவர் அல்ல, தலைவர் கருணாநிதி. தலைவராகவே பிறந்தவர்தான் அவர். அதற்கு அடித்தளமாக அமைந்த ஊர்தான் இந்த திருவாரூர். மன்னர்கள்கூட தாங்கள் ஆளும்போதுதான், கோட்டமும் கோட்டையும் கட்டுவார்கள். ஆனால், தலைவர் கருணாநிதிக்கு நிறைவுக்குப் பிறகு கோட்டம் இங்கே எழுப்பியிருக்கிறது. இன்னமும் அவர் வாழ்கிறார். ஏன் ஆள்கிறார் என்பதின் அடையாளமாகத்தான், மிக கம்பீரத்தோடு இங்கு இந்தக் கோட்டம் அமைந்திருக்கிறது.

எனது தாயார் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில், கலைஞர் கோட்டம் கட்டப்பட்டு அது திறக்கப்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரையில், என் தந்தைக்கு என் தாய் எழுப்பிய அன்புக் கோட்டையாகவே நான் இதை கருதுகிறேன்.தத்துவ மேதை டி.கே.சீனிவாசனும், கவிஞர் கா.மு.ஷெரிஃபும் வாழ்த்திப் பேசிட, புரட்சித் தோட்டமான எனது தந்தையை தாயார் திருமணம் செய்து கொண்டதும் இதே திருவாரூரில்தான். தலைவர் கருணாநிதியின் வாழ்க்கையில் எத்தனையோ மேடு, பள்ளங்கள், வெற்றி தோல்விகள், ஏற்ற இறக்கங்கள் என்று எத்தனையோ ஏற்பட்டிருந்தாலும் அத்தனையையும் சிரித்த முகத்துடன் எதிர்கொண்டு, எப்போதும் அதே கருணை உள்ளத்துடன் இருந்தவர் என்னுடைய தாயார் தயாளு அம்மாள்.

கலைஞர் கோட்டம் என்பது, கலைஞரின் பன்முக பரிணாமங்களைச் சொல்லக்கூடிய கருவூலம். அவரது திருவுருவச் சிலை, முத்துவேலர் நூலகம், இரண்டு அரங்குகள், இரண்டு திரையரங்குகள், பாளையங்கோட்டைச் சிறையில் இருப்பதைப் போன்ற வடிவமைப்பு, செல்ஃபி பாய்ண்ட், கலைஞருடன் படம் எடுத்துக்கொள்ளக்கூடிய வசதி, என அனைத்தும் அடங்கியதாக இந்த கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் தேரழகு என்பார்கள். அந்த திருவாரூர் தேர் கலைஞர் கோட்டத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. திராவிடக் கட்டிடக் கலையோடு நவீன வசதிகளையும் இணைத்து இந்த கோட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. 2018-ம் ஆண்டு, தலைவர் கருணாநிதி நிறைவுற்றபோது, நானும் எனது சகோதரி செல்வியும் இந்த நிலத்தை நாங்கள் விலைக்கு வாங்கினோம். அதன்பின்னர், இந்த நிலத்தில், அறக்கட்டளையின் சார்பில் கலைஞர் கோட்டம் அமைக்க முடிவு செய்து 4 ஆண்டுகாலம் பல சிரமங்களை மேற்கொண்டு இதை கட்டி முடித்துள்ளனர்” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

ஜனநாயகம் என்பது வீட்டுக்கு விளக்கு, சர்வாதிகாரம் என்பது காட்டுத்தீ. அதை அணைக்க வேண்டும். மீண்டும் பா.ஜ.க-வை ஆள அனுமதிப்பது, அது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் கேடு. நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராவோம், நாற்பதும் நமதே, நாடும் நமதே” என்றார்.

கலைஞர் கோட்டத்தை திருவாரூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முத்துவேலர் நூலகத்தை பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்தார்.

Leave your comments here...