ரஷ்யா உக்ரைன் போர் விவகாரத்தில், அமைதியின் பக்கம் இந்தியா நிற்கும் – அமெரிக்காவில் பிரதமர் மோடி பேட்டி..!

இந்தியா

ரஷ்யா உக்ரைன் போர் விவகாரத்தில், அமைதியின் பக்கம் இந்தியா நிற்கும் – அமெரிக்காவில் பிரதமர் மோடி பேட்டி..!

ரஷ்யா உக்ரைன் போர் விவகாரத்தில், அமைதியின் பக்கம் இந்தியா நிற்கும் – அமெரிக்காவில் பிரதமர் மோடி பேட்டி..!

இந்தியா, அமெரிக்கா தலைவர்கள் இடையேயான நம்பிக்கை முன் எப்போதையும் விட தற்போது அதிகரித்துள்ளது எனக்கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி , ரஷ்யா தாக்குதல் விவகாரத்தில், அமைதியின் பக்கம் இந்தியா நிற்கும் என உலக நாடுகள் நம்பிக்கை கொண்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்காவிற்கு இன்று புறப்பட்டு சென்றார். அங்கு அவர் 3-நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த பயணத்தை மேற்கொள்ளும் விதமாக, தமது பிரத்யேக “ஏர் இந்தியா ஒன்” விமானத்தில் புறப்படும் முன்பு, அமெரிக்காவின் புகழ் பெற்ற “தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்” எனும் பத்திரிக்கைக்கு பிரதமர் மோடி ஒரு பேட்டியளித்தார்.

அப்போது 5 முக்கிய தலைப்பிலான கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு: இந்தியாவுடன் இணைந்து உலகளாவிய சவால்களை சந்திப்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவு முன்னெப்போதையும் விட வலுவாகவும், ஆழமாகவும் உள்ளது.

இந்தியா, அமெரிக்கா தலைவர்கள் இடையேயான நம்பிக்கையும் அதிகரித்துள்ளது. சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பிரதமர் நான் தான். அதனால் தான், எனது சிந்தனை, எனது நடவடிக்கைகள், நான் சொல்வது மற்றும் செய்வது ஆகியன நாட்டின் மரபுகளால் ஈர்க்கப்பட்டவை. அதில் இருந்து நான் எனது பலத்தைப் பெறுகிறேன். நான் என் நாட்டை என் தேசமாக உலகிற்கு எனது நாடாக முன்வைக்கிறேன்.

சீனா குறித்த பார்வை:- சீனா உடன் உறவு சுமூகமாக இருப்பதற்கு எல்லை பகுதிகளில் அமைதி மற்றும் வெளிப்படைத்தன்மை இருப்பது அவசியம். இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை மதிப்பது, சட்டத்தின் ஆட்சியை கடைபிடிப்பது, வேறுபாடுகள் மற்றும் சர்ச்சைகளை அமைதியான முறையில் தீர்ப்பது ஆகியவற்றில் எங்களுக்கு முக்கிய நம்பிக்கை உள்ளது. அதேநேரத்தில், இந்தியா, தனது இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாக்க தயாராக உள்ளது. அதற்காக உறுதிபூண்டுள்ளது. சர்வதேச சட்டங்களையும் மற்ற நாடுகளின் இறையாண்மையையும் அனைத்து நாடுகளும் மதிக்க வேண்டும். தூதரகம் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் சச்சரவுகளை தீர்த்து கொள்ள வேண்டும். போர் மூலம் அல்ல

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இடம் பெறும் முயற்சி: ஐ.நா., சபையில் இந்தியாவுக்கு உயர்ந்த மற்றும் ஆக்கப்பூர்வமான பங்காற்ற தகுதி உள்ளது. இந்தியா எந்த நாட்டையும் மாற்றியமைப்பதாக பார்க்கவில்லை. இன்று உலகம் முன் எப்போதையும் விட ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு உள்ளது. ஒன்றுக்கொன்று சார்ந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் தற்போதைய உறுப்பினர் குறித்து மதிப்பீடு செய்ய வேண்டும். இந்தியா, அங்கு இருக்க வேண்டும் என உலக நாடுகள் கூற வேண்டும்.

உக்ரைன் போர்: தாங்கள் நடுநிலை வகிப்பதாக சில நாடுகள் கூறுகின்றன. ஆனால் நாங்கள் அமைதியின் பக்கம் நிற்கிறோம். அமைதிக்கு , இந்தியா முக்கியத்துவம் அளிக்கும் என உலக நாடுகள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. உக்ரைன் தாக்குதல் விவகாரத்தில் இந்தியா தன்னால் இயன்றதைச் செய்யும். மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், நிலையான அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா ஆதரிக்கும். ரஷ்யா மீதான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து உலக நாடுகள் புரிந்து கொண்டுள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Leave your comments here...