மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் – சென்னை மாநகராட்சி கோரிக்கை.!

தமிழகம்

மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் – சென்னை மாநகராட்சி கோரிக்கை.!

மழைநீர் வடிகால் பணிகள்  நடைபெற்று வரும் இடங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் – சென்னை மாநகராட்சி கோரிக்கை.!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் பிற சேவை துறைகளின் சார்பில் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதுகுறித்து சென்னை மாநாகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் கடந்த பருவமழையின் போது மழைநீர் தேங்கிய இடங்கள் மற்றும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் இல்லாத இடங்கள் கண்டறியப்பட்டு அவ்விடங்களில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளும், தமிழ்நாடு முதலமைச்சரால் அமைக்கப்பட்ட சென்னை வெள்ள தடுப்பு மேலாண்மை குழுவின் பரிந்துரைகளின்படி பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.

அதன்படி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் சிங்கார சென்னை 2.0 திட்டம் பகுதி 1 மற்றும் 2 ன் கீழ் ரூ.277.04 கோடி மதிப்பில் 60.83 கிலோ மீட்டர் நீளத்திற்கும், வெள்ள நிவாரண நிதியின் கீழ் ரூ.295.73 கோடி மதிப்பில் 107.57 கிலோ மீட்டர் நீளத்திற்கும், உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.27.21 கோடி மதிப்பில் 10 கிலோ மீட்டர் நீளத்திற்கும், மூலதன நிதியின் கீழ் ரூ.8.26 கோடி மதிப்பில் ​1.05 கிலோ மீட்டர் நீளத்திற்கும் மாநகரின் பிராதன பகுதிகளில் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியின் கீழ் கொசஸ்தலையாறு வடிநில பகுதிகளில் ரூ.3220 கோடி மதிப்பில் 769 கிலோ மீட்டர் நீளத்திற்கும், ஜெர்மன் பன்னாட்டு வங்கி நிதி உதவியின் கீழ் கோவளம் வடிநில பகுதிகளில் ரூ.1714 கோடி மதிப்பில் 360 கிலோ மீட்டர் நீளத்திற்கும், உலக வங்கி நிதி உதவியின் கீழ் விடுபட்ட இடங்களில் ரூ.120 கோடி மதிப்பில் 44.88 கிலோ மீட்டர் நீளத்திற்கும் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் மழைநீர் வெளியேற ஏதுவாக மூடிய பெருவடிகால் அமைக்கும் பணிகளும் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் நடைபெற்று வருகின்றன. நெடுஞ்சாலை துறையின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் ரூ. 90.45 கோடி மதிப்பீட்டில் 12.75 கிலோமீட்டர் நீளத்திற்கு புதிய மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் பலமுறை நேரடியாக சென்று நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்து வருவதோடு, அவ்விடங்களில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, மேற்குறிப்பிட்ட மழைநீர் வடிகால் பணிகளின் முன்னேற்றம் குறித்து அவ்வப்பொழுது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர், பொதுப்பணித் துறை அமைச்சர், மேயர், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஆகியோரால் அவ்வப்பொழுது நேரடியாக கள ஆய்வு செய்யப்பட்டும், சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடனும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் இடங்கள் மற்றும் சேவை துறைகளான தமிழ்நாடு மின்சார வாரியம், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதைவட கம்பிகள் அமைக்கும் பணி மற்றும் குழாய் பதிப்பு பணிகள் தொடர்பான இடங்களிலும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்புகள் அமைக்க ஏற்கனவே அனைத்து துறை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சியின் சார்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் இடங்களில் தடுப்புகள் அமைப்பதற்காக நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்படுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட பொறியாளர்களால் அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் அதனை முறையாக பின்பற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு சில இடங்களில் தடுப்புகள் அமைக்காத ஒப்பந்ததாரர்கள் மீது மாநகராட்சியின் சார்பில் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இது தவிர சென்னை பெருநகர காவல் துறையின் சார்பில் பணிகள் நடைபெறும் இடங்களில் தடுப்புகள் அமைக்கப்படாத இடங்கள் குறித்த தகவல்கள் பெறப்பட்டு, அவ்விடங்களிலும் உடனடியாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து இடங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருப்பது சம்மந்தப்பட்ட பொறியாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சென்னையில் பெய்த வரலாறு காணாத மழையின் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் இனி வரும் காலங்களில் மழை பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் விதமாக நிரந்தர தீர்வினை ஏற்படுத்த பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதனடிப்படையில் சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் குறுகிய காலத்தில் போர்க்கால அடிப்படையில் சென்னையில் மட்டும் ரூ. 5752.69 கோடி மதிப்பீட்டில் 1366.08 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

எனவே மழைநீர் வடிகால் மற்றும் பிற சேவை துறைகளின் சார்பில் சாலை மற்றும் தெருக்களில் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் பொதுமக்கள் செல்லும் போது தடுப்புகளுக்கு இடையே கடந்து செல்லாமல் முறையாக தடுப்புகளை சுற்றி கடந்து செல்லவும், பாதுகாப்பாக செல்லவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மழைநீர் வடிகால் மற்றும் பிற சேவை துறைகளின் சார்பில் சாலை மற்றும் தெருக்களில் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் தடுப்புகள் இல்லாத இடங்கள் குறித்து பொதுமக்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணில் தெரிவிக்கலாம்.

Leave your comments here...