ஆபாச வீடியோ சர்ச்சை… நாட்டை விட்டு தப்பியோடிய தேவகௌடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா…!

அரசியல்

ஆபாச வீடியோ சர்ச்சை… நாட்டை விட்டு தப்பியோடிய தேவகௌடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா…!

ஆபாச வீடியோ சர்ச்சை… நாட்டை விட்டு தப்பியோடிய தேவகௌடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா…!

நாட்டையே அதிர வைத்துக் கொண்டிருக்கும் ஆபாச வீடியோக்கள் சர்ச்சையில் சிக்கிய முன்னாள் பிரதமர்தேவகௌடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சார்பில் 1996 -ஆம் ஆண்டு முதல் 1997-ஆம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக இருந்தவர் தேவகௌடா.  கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சராகவும் இருந்த இவரின் மகன்கள் ரேவண்ணா மற்றும் குமாரசாமி. குமாரசாமி கர்நாடகாவின் முன்னாள் முதல்வராவார்.

ரேவண்ணா மாநிலத்தின் அமைச்சராக இருந்துள்ளார்.  தேவகௌடாவின் பேரன்கள் நிகில் குமாரசாமி,  பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோரும் அரசியலில் உள்ளனர்.  தற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்துள்ள மதசார்பற்ற ஜனதா தளத்தின் வேட்பாளராக மண்டியா தொகுதியில் குமாரசாமி,  ஹசன் தொகுதியில் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிட்டுள்ளனர்.

இரண்டு கட்டமாக அம்மாநிலத்தில் தேர்தல் நடைபெற்று வரும் சூழலில்,  பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ சர்ச்சை கர்நாடகா மாநிலத்தை உலுக்கி உள்ளது.  பல பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா இருக்கும் வீடியோ காட்டுத் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநில மகளிர் குழுவின் தலைவி நாகலட்சுமி சவுத்ரி மாநிலத்தின் முதல்வர் சித்தராமையாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக சித்தராமையா தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு,  பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஹசன் மாவட்டத்தில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் ஆபாச வீடியோ கிளிப்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில், எஸ்ஐடி விசாரணை நடத்துமாறு அரசுக்கு மகளிர் ஆணையத் தலைவர் கடிதம் எழுதியிருந்தார். அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தான்,  குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு தப்பியோடிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  தேர்தல் நடைபெறும் சூழலில் எம்.பி மீது இவ்வாறான குற்றச்சாட்டு வீடியோ வெளியாகியுள்ளது கர்நாடகா மாநிலத்தில் பாஜக கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Leave your comments here...