உஜ்ஜைன் மகாகாளேஸ்வர் கோயில் : ரூ.316 கோடி திருப்பணி நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி..!

இந்தியா

உஜ்ஜைன் மகாகாளேஸ்வர் கோயில் : ரூ.316 கோடி திருப்பணி நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி..!

உஜ்ஜைன் மகாகாளேஸ்வர் கோயில் : ரூ.316 கோடி திருப்பணி நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி..!

பன்னிரெண்டு ஜோதிர்லிங்க தலங்களின் ஒன்றான உஜ்ஜைன் மகாகாலேஸ்வர் கோயிலில் ரூ.316 கோடியில் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகளை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

மத்தியபிரதேச மாநிலம், உஜ்ஜைனில் பிரசித்தி பெற்ற மகாகாலேஸ்வர் கோயில் அமைந்துள்ளது. 12 ஜோதிர்லிங்க சிவாலயங்களில் ஒன்றான இக்கோயிலில் ரூ.856 கோடியில் நடைபாதை வளாகத்தை அமைக்கும் பணி கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ருத்ரசார் ஏரிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நடைபாதையின் நீளம் 900 மீட்டர்.

இதில் 108 அலங்கரிக்கப்பட்ட தூண்கள், சிவபுராண கதைகளை விளக்கும் 53 சுவர் ஓவியங்கள், சிவபுராண காட்சிகளை விளக்கும் 93 சிலைகள், அழகிய பாலம், பிரமாண்ட 2 நுழைவு வாயில்கள், அன்னசத்திரம், பிரசங்க மண்டபம், தாமரைக் குளம் போன்றவை கட்டப்பட்டுள்ளன. நாட்டிலேயே மிகப்பெரிய பிரமாண்டமான கோயில் நடைபாதை வளாகம் இது.

இந்த புதுப்பிக்கப்பட்ட நடைபாதையை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதற்காக நேற்று மாலை குஜராத்தில் இருந்து அவர் உஜ்ஜைன் வந்தார். கோயில் வளாகத்தில் புனித நூலால் சுற்றப்பட்ட பிரமாண்ட சிவலிங்கத்தை அவர் திறந்து வைத்து, ரூ.316 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட முதல் கட்ட நடைபாதை திருப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அதைத் தொடர்ந்து, மபி முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுடன் நடைபாதை வளாகத்தை சுற்றிப்பார்த்த பிரதமர் மோடி, மகாகாலேஸ்வருக்கு சிறப்பு பூஜை செய்தார்.

அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி பேசியதாவது: உஜ்ஜைன் நகரம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாட்டின் செழிப்பு மற்றும் அறிவுக்கு வழிவகுத்துள்ளது. இந்நகரம் புவியியில் ரீதியாக நாட்டின் மையமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், நாட்டின் ஆன்மாவின் மையமும் கூட. உஜ்ஜைனின் ஒவ்வொரு மூலையிலும் ஆன்மீகம் பரவிக்கிடக்கிறது.

தற்போது நாட்டின் ஆன்மிக தலங்களின் பெருமையை மீட்டெடுத்து வருகிறோம். பல ஆன்மீக தலங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அயோத்தியில் முழு வேகத்தில் ராமர் கோயில் கட்டப்படுகிறது. சோம்நாத், கேதார்நாத், பத்ரிநாத் போன்ற பிரசித்தி பெற்ற கோயில்களிலும் புதுப்பிப்பு பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. வெற்றியின் உச்சத்தை அடைய, தேசம் அதன் கலாச்சார உச்சத்தை தொட்டு, அதன் அடையாளத்துடன் பெருமையுடன் நிற்க வேண்டியது அவசியமாகும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave your comments here...