600 கோடி செலவில் 239 ஆண்டுகளுக்குப் பின் மிளிரும் விஸ்வநாதர் கோயில் வளாகத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்

இந்தியா

600 கோடி செலவில் 239 ஆண்டுகளுக்குப் பின் மிளிரும் விஸ்வநாதர் கோயில் வளாகத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்

600 கோடி செலவில் 239 ஆண்டுகளுக்குப் பின் மிளிரும் விஸ்வநாதர் கோயில் வளாகத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்

காசி விஸ்வநாதர் கோவிலை கூடுதல் வசதிகளுடன் 339 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தும் பணிகள் நிறைவு செய்யப்பட்ட நிலையில் இன்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரனாசியில் அமைந்துள்ளதுகாசி விஸ்வநாதர் ஆலயம், இந்துவாகிய ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது தரிசிக்க நினைக்கும் கோவில்களுள் ஒன்றான இது ஒரு முக்தி தலமாகும். மோட்சம் தரும் ஏழு தலங்களுள் காசியும் ஒன்றாகும். பல்வேறு சிறப்புகளைக்கொண்ட காசி விஸ்வநாதர் ஆலயம், அம்மனின் சக்தி பீடங்களில் ஒன்று. மற்ற தலங்களில் இல்லாத வகையில் சிவபெருமான் இங்கு மகிழ்ச்சிப் பெருக்குடன் அருள்புரிவதால், ‘ஆனந்த பவனம்’ என்றும் இந்த ஊரைக் குறிப்பிடுகிறார்கள்.

சுமார் 23,000 கோயில்களைக்கொண்டிருக்கும் புண்ணிய பூமி காசியில், விஸ்வநாதர் ஆலயம் கங்கை நதிக்கரையில் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் இந்த ஆலயத்தை சென்றடைய குறுகிய தெருக்களையும், கடைவீதிகளையும் கடந்து செல்வது சிரமத்துக்குரியதாக இருந்தது. மேலும் ஆலய வளாகம் 3,000 சதுர அடியில் சிறிய அளவில் இருந்ததால் மக்கள் நெருக்கடி அதிகமானதாக இருந்து வந்தது. இந்த ஆலய வளாகத்தை பல்வேறு சிறப்புக்களுடன், விரிவாக்க திட்டமிடப்பட்டது. வாரனாசி தொகுதியின் எம்.பியான பிரதமர் மோடியின் கனவுத் திட்டமாகவே இது பார்க்கப்பட்டது.

600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 லட்சம் சதுர அடி பரப்புக்கு ஆலய வளாக விரிவாக்க திட்டம் தயாரிக்கப்பட்டது. கங்கை படித்துரை வழியாக நேரடியாக ஆலயத்திற்கு வரும் வகையில் நடைபாதை வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டது. காசி விஸ்வநாதர் கோயிலை கங்கை கரைகளுடன் இணைக்கும் வகையில் 320 மீட்டர் நீளமும் 20 மீட்டர்அகலமும் கொண்ட நடைபாதை, அருங்காட்சியகம், நூலகம், யாத்ரீகர்களுக்கான மையம் உள்ளிட்டமேம்பாட்டுப் பணிகள் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டள்ளன.

இந்நிலையில் முதற்கட்ட பணிகள் 339 கோடி ரூபாயில் முடிக்கப்பட்டு, 23 கட்டிடங்களை உள்ளடக்கிய காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தை நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று அர்ப்பணித்தார். முதலில் காலபைரவர் கோவிலில் பிரதமர் வழிபட்டார். பின்னர் காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்து ஆரத்தி காட்டி வழிபட்டார்.

பிரதமர் மோடி பேசியதாவது: அவருடைய அருள் இல்லாமல் எதுவும் இருக்காது என்றார். நாட்டு மக்களுக்கு அவரது அருளை பிரதமர் வேண்டினார். காசியில் ஒருவர் நுழைந்தவுடன் அவர் அனைத்து தழைகளிலிருந்தும் விடுபடுவார் என புராணங்களைச் சுட்டிக்காட்டி பிரதமர் தெரிவித்தார். “பகவான் விஸ்வேஸ்வரரின் அருளாசி, நாம் இங்கு வந்தவுடன் நமது உள்ஆத்மாவை விழிக்கச் செய்து தெய்வீக சக்தியை வழங்குகிறது”. விஸ்வநாதர் ஆலயத்தின் புதிய வளாகம் வெறும் பிரம்மாண்டமான கட்டிடம் மட்டுமல்ல. இதுவொரு இந்திய சனாதன கலாச்சாரத்தின் ஒரு அடையாளம். இது நமது ஆன்மீக ஆன்மாவின் அடையாளம். இது இந்தியாவின் பழமை, பாரம்பரியம், இந்தியாவின் சக்தி, இயக்கத்தின் அடையாளம். ஒருவர் இங்கு வந்தவுடன் அவர் நம்பிக்கையுடன் கடந்த காலத்தின் பெருமையையும் உணருவார் என பிரதமர் கூறினார். இங்கு பழமையும், புதுமையும் ஒன்றிணைந்து வருகிறது. பழமையின் உத்வேகம் வருங்காலத்திற்கான திசையை வழங்குகிறது. இதனை நாம் காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தில் கண்டு வருகிறோம் என்று அவர் கூறினார்.


முன்பு ஆலய வளாகம் வெறும் 3000 சதுர அடியில் மட்டுமே இருந்தது. இப்போது சுமார் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது கோயில் வளாகத்திற்குள் 50,000 முதல் 75,000 வரை பக்தர்கள் செல்ல முடியும். முதலில் தரிசனம், பின்னர் கங்கையில் நீராடல் அங்கிருந்து நேரடியாக விஸ்வநாதர் ஆலயத்திற்கு வர முடியும் என்று பிரதமர் தெரிவித்தார்.

காசி நகரின் பெருமைகள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், சிவபெருமானின் கருணையால் காசி அழிவற்றதாக திகழ்கின்றது என்று கூறினார். இந்த பிரம்மாண்டமான வளாகத்தை உருவாக்கிய ஒவ்வொரு தொழிலாளருக்கும் அவர் தமது நன்றியைத் தெரிவித்தார். கொரோனா தொற்று பரவலின் போது கூட அவர்கள் இங்கு பணியை நிறுத்தவில்லை. தொழிலாளர்களை சந்தித்து அவர் பாராட்டினார். வளாக கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுடன் திரு.மோடி மதிய உணவு அருந்தினார். கட்டிட கலைஞர்களை பிரதமர் பாராட்டினார். கட்டுமானத்துடன் தொடர்பு கொண்டவர்கள், நிர்வாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களையும் அவர் வாழ்த்தினார். எல்லாவற்றுக்கும் மேலாக, காசி விஸ்வநாதர் வளாகத் திட்டத்தை இடையுறாத பணிக்கு இடையே நிறைவேற்றிய உத்தரப்பிரதேச அரசு, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவர் பாராட்டினார்.

படையெடுப்பாளர்கள் இந்த நகரத்தை தாக்கியதாக கூறிய பிரதமர், இதனை அவர்கள் அழிக்க முயற்சித்ததாக தெரிவித்தார். ஔரங்கசீப்பின் அராஜகங்களையும், பயங்கரவாதத்தையும் இந்த நபரின் வரலாறு கண்டது. வாள்முனையில் நாகரீகத்தை மாற்ற முயன்றவர்கள், மதவெறி மூலம் கலாச்சாரத்தை அழிக்க முயன்றவர்களை வரலாறு கண்டது. ஆனால் இந்த நாட்டின் மண் உலகில் மற்ற பகுதிகளை விட வேறுபாடானது. ஒரு ஔரங்கசீப் இருந்தால், சிவாஜியும் இருப்பார் என்று கூறிய பிரதமர், சலார் மசூத் வந்தால், மன்னர் சுகல்தேவை போன்ற துணிச்சல்மிக்க வீரர்கள் இந்தியாவின் ஒற்றுமையின் சுவையைக் காட்டுவார்கள். ஆங்கிலேயர் காலத்திலும் காசி மக்கள் ஹேஸ்டிங்ஸ்-க்கு என்ன நடந்தது என்பதை அறிந்திருந்தனர் என்றார்.

காசியின் முக்கியத்துவம் மற்றும் பெருமைகளை விளக்கிய பிரதமர், காசி வெறும் வார்த்தையல்ல, இது உணர்வுகளின் படைப்பு என்று கூறினார். காசியில் வாழ்க்கை மட்டுமல்லாமல் இறப்பும் ஒரு கொண்டாட்டம்தான். காசியில் உண்மை கலாச்சாரமாகும். அன்பு பாரம்பரியமாகும். வாரணாசியில் ஜெகத்குரு சங்கராச்சாரியார், ஸ்ரீ டோம் ராஜாவின் தூய்மையால் உத்வேகம் அடைந்தார். இந்த இடத்தில்தான் கோஸ்வாமி துளசிதாஸ் பகவான் சங்கரனின் அருளால் புனிதமான ராம சரிதத்தை படைத்தார். பகவான் புத்தரின் ஞானம் உலகிற்கு சாரநாத்தை வெளிக்காட்டியது என்று கூறிய பிரதமர், கபிர்தாசர் போன்ற புனிதர்கள் சமுதாய மேம்பாட்டிற்காக தோன்றினார்கள் என்றார். சமுதாயத்தை ஒன்றுமைப்படுத்த வேண்டிய அவசியம் இருக்குமானால் அப்போது காசி ஆற்றலின் மையமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். காசி 4 ஜைன தீர்த்தங்கரர்களின் பூமி என்று கூறிய பிரதமர், அஹிம்சை மற்றும் எளிமையின் சின்னமாக திகழ்ந்தது என்றார். ராஜா அரிச்சந்திரனின் நேர்மை முதல் வல்லபாச்சாரியா, ராமானந்ஜி ஞானம் வரை, சைதன்ய மகாபிரபு, சமத்குரு ராம்தாஸ் முதல் சுவாமி விவேகானந்தர், மதன்மோகன் மாளவியா வரை இந்த புண்ணிய பூமி துறவிகள், ஆச்சாரியர்கள் என ஏராளமானோருக்கு இருப்பிடமாக இருந்துள்ளது. சத்ரபதி சிவாஜி மகராஜ் இங்கு வந்ததாக பிரதமர் குறிப்பிட்டார். ராணி லட்சுமிபாய் முதல் சந்திரசேகர் ஆசாத் வரை ஏராளமான வீரர்களுக்கு கர்ம பூமியாக காசி திகழ்ந்தது. பாரதந்து அரிச்சந்திரா, ஜெய்சங்கர் பிரசாத். முன்சீப் பிரேம்சந்த், பண்டிட் ரவிசங்கர், பிஸ்மில்லாகான் போன்ற திறமை மிக்கவர்கள் இந்த பெரும் நகரத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் உறுதியான முடிவு இந்தியாவுக்கு பிரகாசமான எதிர்காலத்தை அளிக்கும் என்று பிரதமர் தெரிவித்தார். இந்த வளாகம் நமது திறமைக்கும், கடமைக்கும் சான்றாகும். உறுதிப்பாடு மற்றும் உறுதியான சிந்தனை இருந்தால் எதுவும் இயலாதது அல்ல. கற்பனைக்கு எட்டாதவற்றை சாத்தியமாக்கும் ஆற்றல் இந்தியர்களிடம் உள்ளது என்று கூறிய பிரதமர், நமக்கு தவம், நோன்பு ஆகியவை தெரியும். நாட்டுக்காக இரவையும், பகலையும் எவ்வாறு கழிப்பது என்பதை நாம் அறிவோம். சவால் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் இந்தியர்களான நாம் அதனை ஒன்று சேர்ந்து முறியடிக்க முடியும் என்று தெரிவித்தார்.

இன்றைய இந்தியா நாம் இழந்த பாரம்பரியத்தை புதுப்பித்துக் கொண்டிருப்பதாக பிரதமர் கூறினார். காசி நகரின் அன்னபூர்ணா அன்னை உறைகிறார். காசியிலிருந்து திருடிச் செல்லப்பட்ட அன்னபூர்ணாவின் சிலை இப்போது ஒரு நூற்றாண்டுக்கு பின்னர் மீண்டும் நிர்மாணிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்தார்.

தம்மைப் பொறுத்தவரை கடவுள் மனிதர்கள் வடிவத்தில் வருவதாக பிரதமர் கூறினார். ஒவ்வொரு இந்தியரும் கடவுளின் ஒரு அங்கம் என்று கூறிய அவர், நாட்டுக்காக, தூய்மை, படைப்பு, தற்சார்பு இந்தியாவுக்கான தொடர் முயற்சி ஆகிய 3 உறுதிமொழிகளை மக்களிடம் அவர் கேட்டார்.

தூய்மை என்பது வாழ்க்கைக்கான வழி என்று கூறிய பிரதமர், கங்கையை புத்துயிரூட்டும் இயக்கத்தில் மக்களின் பங்களிப்பு அவசியம் என்று கூறினார். நீண்ட கால அடிமைத்தனம் நமது நம்பிக்கையை சீர்குலைத்து விட்டதாக கூறிய பிரதமர், நமது சொந்த படைப்பாற்றல் மீதான நம்பிக்கையை நாம் இழந்து விட்டோம் என்றார். இன்று இந்த ஆயிரமாண்டு பழமையான காசியிலிருந்து ஒவ்வொரு நாட்டு மக்களையும் முழு நம்பிக்கை, புதுமை ஆகியவற்றுடன் படைப்பாற்றலை பெருக்குமாறு கேட்டுக் கொள்வதாக அவர் வேண்டுகோள் விடுத்தார். தற்சார்பு இந்தியாவுக்காக நமது முயற்சிகளை எழுப்ப வேண்டியது மூன்றாவது தீர்மானம் என்று பிரதமர் கூறினார். சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளான இந்த அமிர்த காலத்தில் இந்தியா சுதந்திரத்தின் நூறாண்டுகளைக் கொண்டாடும் போது எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக நாம் உழைக்க வேண்டுமென்று கூறி பிரதமர் உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக உத்தரப் பிரதேசம்., அசாம், அருணாச்சலப்பிரதேசம், கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, உத்தரகாண்ட் போன்ற 18 பாஜக ஆளும் முதல்வர்கள், பிகார், நாகாலாந்து துணை முதல்வர்கள் ஆகியோர் பங்கேற்கிறார்கள். காசி விஸ்வநாதர் கோவில் விழா காரணமாக காசி நகர் விழாக்கோலம் பூண்டுள்ளது.

Leave your comments here...