ஹெலிகாப்டர் விபத்து – மீட்பு பணிகளில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள், போலீசாருக்கு கவுரவித்த ராணுவம்

இந்தியா

ஹெலிகாப்டர் விபத்து – மீட்பு பணிகளில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள், போலீசாருக்கு கவுரவித்த ராணுவம்

ஹெலிகாப்டர் விபத்து   – மீட்பு பணிகளில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள், போலீசாருக்கு  கவுரவித்த ராணுவம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பார்க் அருகே, நஞ்சப்பா சத்திரம் பகுதியில் கடந்த 8ம் தேதி ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டு, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். விபத்து ஏற்பட்ட உடன் சம்பவ இடத்தில் இருந்து கம்பளி வழங்கி, தண்ணீர் பாய்ச்சி, தீயை அணைத்த மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மக்கள், தீயணைப்பு வீரர்கள், போலீசார், வருவாய்துறையினர், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், உதவியாளர்கள் என அனைவரையும் கவுரவிக்க ராணுவம் முடிவு செய்தது. இதன் பேரில், தக்ஷின பாரத் ராணுவ தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் அருண் வருகை தந்து, இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, இன்று காலை மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் நாகேஷ் சதுக்கத்தில், உயிரிழந்த வீரர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், தீயணைப்பு வீரர்கள், போலீசார், தன்னார்வலர்கள், வருவாய்துறையினர், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் உள்ளிட்ட மீட்பில் உதவியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை லெப்டினன்ட் ஜெனரல் அருண் வழங்கினார். தொடர்ந்து, நஞ்சப்பா சத்திரம் காட்டேரி பண்ணை பகுதி மக்களுக்கு அரிசி உட்பட பல்வேறு உதவி பொருட்களை அருண் தலைமையில் ராணுவத்தினர் வழங்கினர்.

பின்னர் லெப்டினன்ட் ஜெனரல் அருண் கூறியதாவது: மக்களுக்காக பாதுகாப்பு பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். இந்த சூழ்நிலையில் விபத்து நடந்துள்ளது. கிராம மக்கள் உதவி செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த தருணம் பெருமையாக உள்ளது. விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் வருணின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மாதிரியான விபத்து எதிர்பாராதது. இதில் மீட்பு பணியில் ஈடுபட்ட தமிழக அரசுக்கு மிகப்பெரிய நன்றி. காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த பகுதியில் வசிக்கும் மக்களும் துரிதமாக செயல்பட்டு மீட்பு உதவிகளை செய்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நஞ்சப்பா சத்திரம் கிராமத்திற்கு சென்ற லெப்டினன்ட் அருண், உதவி செய்த கிராமத்தினர் முன்னிலையில் பேசியதாவது: இந்த கிராமத்தை ராணுவத்தின் சார்பில் அடுத்தாண்டு டிச.,8 வரையிலான ஓராண்டுக்கு தத்தெடுக்கிறோம். இந்த ஓராண்டு காலத்திற்கு ஒவ்வொரு மாதமும் ராணுவத்தை சேர்ந்த ஒரு டாக்டர், ஒரு செவிலியருடன் மருத்துவ முகாம் நடத்தப்படும். இப்பகுதி மக்கள் அதனை பயன்படுத்திக்கொள்ளலாம். அதேபோல், இப்பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களுது உதவ ராணுவம் தயாராக உள்ளது.

வெடிக்கும் சப்தம், நெருப்பு ஆகியவற்றை பொருட்படுத்தாது நீங்கள் செய்த உதவி மிகப்பெரியது. உங்களுக்கு எவ்வளவு நன்றி கூறினாலும், நீங்கள் செய்த உதவிக்கு ஈடாகாது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து மீட்பு பணிக்கு உதவியவர்களுடன் கலந்துரையாடிய லெப்டினன்ட் அருண், முதன்முதலில் விபத்தை நேரில் பார்த்து தகவல் கொடுத்த கிருஷ்ணசாமி, சந்திரகுமார் ஆகிய இருவருக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் வழங்கினார்.

Leave your comments here...