நாய் கடித்து மூர்ச்சையான குரங்கு… முதலுதவி அளித்த வாலிபருக்கு குவியும் பாராட்டுகள்..!

சமூக நலன்

நாய் கடித்து மூர்ச்சையான குரங்கு… முதலுதவி அளித்த வாலிபருக்கு குவியும் பாராட்டுகள்..!

நாய் கடித்து மூர்ச்சையான குரங்கு… முதலுதவி அளித்த வாலிபருக்கு குவியும் பாராட்டுகள்..!

பெரம்பலுார் அருகே, நாய் கடித்ததால் மூர்ச்சையாகி உயிருக்கு போராடிய குரங்கை, வாலிபர் ஒருவர் வாயோடு வாய் வைத்து ஊதி மூச்சு கொடுத்து காப்பாற்றிய சம்பவம், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பெரம்பலுார் மாவட்டம், ஒதியம் கிராமத்தில் 9ம் தேதி குரங்கு ஒன்றை, தெரு நாய்கள் விரட்டி விரட்டி கடித்தன. அதில் படுகாயமடைந்த குரங்கு, மரத்தில் ஏறி தப்பித்து, கிளை ஒன்றில் படுத்தவாறு மூர்ச்சையானது.

இதைப் பார்த்த கார் டிரைவர் பிரபு, 38, மரக்கிளையில் இருந்த குரங்கை பத்திரமாக கீழே இறக்கினார். குரங்கை பெரம்பலுாரில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க முடிவு செய்த பிரபு, ‘டூ – வீலரில்’ நண்பர்கள் உதவியுடன் எடுத்து சென்றார். பாதி வழியில், குரங்கின் தலை துவண்டு விழுந்தது. குரங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்ந்த பிரபு, டூ – வீலரை நிறுத்தி, குரங்கை தரையில் கிடத்தி, அதன் நெஞ்சு பகுதியை கையால் அழுத்தி விட்டார்.

ஆனாலும், எவ்வித அசைவும் ஏற்படாததால், குரங்கு என்றும் பாராமல் அதன் வாயோடு, தன் வாயை வைத்து ஊதினார். இதை தொடர்ந்து, மூச்சு விட துவங்கிய குரங்கு கண் விழித்து பார்த்தது. இனி காப்பாற்றி விடலாம் என தீர்மானித்த பிரபு, பெரம்பலுார் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள், குரங்குக்கு தொடர் சிகிச்சை அளித்து காப்பாற்றினர்.

வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து, குரங்கு ஒப்படைக்கப்பட்டது. பிரபுவின் செயலை உடன் சென்ற நண்பர், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ பரவி பிரபுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

Leave your comments here...