சென்னையில் மீண்டும் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகம்

சென்னையில் மீண்டும் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னையில் மீண்டும் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னையின் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக மாறியது. அதனைத்தொடர்ந்து அந்தமான் கடல் பகுதியில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்துக்கு மிகப்பெரிய பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டது. இது சென்னைவாசிகளை நிம்மதி அடையச் செய்தது.

இந்நிலையில், காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக சென்னையில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்கிழக்கு அரபிக்கடலில் இருந்து வட கேரளா, தெற்கு கர்நாடகா மற்றும் வட தமிழகம் வழியாக தென்மேற்கு வங்க கடல் வரை (4.5 கி.மீ. உயரம் வரை) நிலவும் காற்றின் திசை மாறும் பகுதி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், சேலம், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 17, 18 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

17, 19ஆம் தேதிகளில் மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டி தென்மேற்கு வங்க கடல் பகுதிகள், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லவேண்டாம் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...