மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜை : சபரிமலை ஐயப்பன் கோயில் நாளை நடை திறப்பு

ஆன்மிகம்

மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜை : சபரிமலை ஐயப்பன் கோயில் நாளை நடை திறப்பு

மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜை : சபரிமலை ஐயப்பன் கோயில் நாளை நடை திறப்பு

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை டிசம்பர் 26-ந் தேதி நடக்கிறது.

இதற்காக சபரிமலை கோவில் நடை நாளை 15-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம் என்ற நிலையில், திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரண்டு மேல்சாந்திகள் நாளையே பதவியேற்கவுள்ளனர். மறுநாள் முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறவுள்ளன.

கடந்த ஆண்டு கொரோனா பிரச்சினை காரணமாக சபரிமலை செல்ல பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததால் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி தினமும் 25 ஆயிரம் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க முதலில் முடிவு செய்யப்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கையை 30 ஆயிரமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் தினமும் 30 ஆயிரம் பேர் கோவிலுக்கு செல்லலாம்.

சபரிமலையில் வருகிற 15-ந் தேதி முதல் 2022 -ம் ஆண்டு ஜனவரி 20-ந் தேதி வரை 5 கட்டங்களாக பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படும். குறிப்பாக சன்னிதானம், பம்பை மற்றும் நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணிக்கு 7,500 போலீசார் நியமிக்கப்படுவார்கள்.

இதற்காக பம்பை, நிலக்கல், சன்னிதானம் ஆகிய இடங்களுக்கு தனித்தனியாக போலீஸ் கட்டுப்பாட்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.மேலும் சபரிமலை செல்லும் பக்தர்கள் இம்முறை பம்பை ஆற்றில் புனித நீராட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் காலை முதல் பகல் 12 மணி வரை சாமிக்கு நெய்யபிஷேகம் செய்யவும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் பக்தர்கள் சன்னிதானத்தில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த ஆண்டும் பக்தர்களின் வாகனங்கள் நிலக்கல்லிலேயே நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave your comments here...