கன்னியாகுமரி கனமழை பாதிப்பு : நாளை நேரில் ஆய்வு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

தமிழகம்

கன்னியாகுமரி கனமழை பாதிப்பு : நாளை நேரில் ஆய்வு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

கன்னியாகுமரி கனமழை  பாதிப்பு :   நாளை நேரில் ஆய்வு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

கன்னியாகுமரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை நேரில் ஆய்வு செய்யவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், குடியிருப்புகள், கோவில்கள், சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குலசேகரம், கோதையார், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் மழை பெய்து வருகிறது. நான்கு அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 11ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கோதையார், தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து சற்று குறைந்துள்ளது. இருப்பினும், அணைகளிலிருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் பெருக்கெடுத்து, குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்த்தாண்டம் அருகே உள்ள வெட்டுவன்னி ஐயப்பன் கோயிலில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதே போல, தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள கோயில்களையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

குழித்துறை-அருமணை சாலை, மார்த்தாண்டம்-தேங்காய்பட்டினம் சாலை, புதுக்கடை- நித்திரவிளை சாலை, அருமனை-களியல் சாலை, ஞாரான்விளை- திக்குறிச்சி சாலைகளில் தண்ணீர் சூழ்ந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. திக்குறிச்சி, ஞாரான்விளை, குழித்துறை, சென்னித்தோட்டம், மங்காடு, முஞ்சிறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இதனால், அங்குள்ள மக்கள் சிலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேரேகால்புதூர் பகுதியில் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் உணவு, குடிநீர் கிடைக்காமல் தவிப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். தோவாளை அண்ணாநகர் பகுதியில் இரண்டு குளங்கள் உடைந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

மேலும் குளச்சல் பகுதியில் உள்ள வெள்ளியாக்குளம் திடீரென உடைந்ததால் அதிலிருந்து தண்ணீர் வெளியேறி அருகில் உள்ள சிங்கன்காவு குடியிருப்பு பகுதியில் புகுந்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சேர்ந்து அங்கிருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். அப்போது, மூன்று மாத இரட்டைக் குழந்தைகளுடன், வீட்டில் சிக்கித் தவித்தவர்களை, இடுப்பளவு வெள்ளத்தில் பத்திரமாக அண்டாவில் வைத்து மீட்டனர். தொடர்ந்து வெள்ளம் புகுந்து வருவதால் வீடுகளின் தரைத்தளம் முழுவதும் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை கொளத்தூரில் இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை கன்னியாகுமரி செல்கிறேன். மழை, வெள்ள பாதிப்புகள் குறித்த ஆய்வறிக்கையை பிரதமரிடம் அளித்து நிதி கோருவோம். தேவைப்பட்டால் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் வழியாக பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை வைப்போம். வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துதான் ஓடிக்கொண்டிருக்கிறேன். கடந்த ஆட்சியில் அதிமுக செய்த முறைகேடுகளை கண்டறிய விசாரணை கமிஷன் அமைக்கப்படும். எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை நாங்கள் பொருட்படுத்துவதே இல்லை” என்றார்.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தின் தற்போதைய நிலவரம் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அந்த ஆலோசனைக் கூட்டத்தில், நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் பொதுப்பணித்துறை – வேளாண்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் சேத விவரங்கள் முதல்வர் கேட்டறிந்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் வாயிலாக கன்னியாகுமரி மாவட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரண முகாம்கள், நிவாரண உதவிகள், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையின் தேவைகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யவும் மக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அமைச்சர்கள் பெரியகருப்பன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மனோ தங்கராஜ், தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு உள்ளிட்டோர் கன்னியாகுமரி மாவட்டத்தில் முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இன்று அதிகனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.ஏற்கெனவே கடந்த 3 நாள்களுக்காக கன்னியாகுமரியில் கனமழை பெய்துவரும் நிலையில், நேற்று மட்டும் அங்கு பெரும்பாலான இடங்களில் சராசரியாக 10 செ.மீ.க்கும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பெருஞ்சாணை அணை, குத்தன் அணைகளில் 22 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Leave your comments here...