மதுரை மீனாட்சியம்மன் கோவில் யானைக்கு கண் சிகிச்சை குறித்து தாய்லாந்து மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்..!

Scroll Down To Discover
Spread the love

உலக பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருவிழாக்களின் போது சுவாமி புறப்பாட்டின்போது டங்கா மாடு, யானை போன்றவை முன்னே செல்வது வழக்கம். இதற்காக கோவிலில் பார்வதி என்ற 25வயது நிரம்பிய பெண் யானை ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. அந்த யானை கோவில் கிழக்கு ஆடி வீதியில் தனியாக அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பார்வதி யானையின் இடது கண்ணில் கோளாறு ஏற்பட்டு அதனால் அந்த கண்ணில் இருந்து நீர்வழிந்து கொண்டே இருந்த நிலையில் கண்ணில் வலி ஏற்பட்டு யானை சற்று சோர்வாக உள்ளதாக தெரியவந்தது.

இதனையடுத்து மருத்துவர்கள் குழு யானைக்கு அளித்த சிகிச்சையின் யானையின் இடது கண்ணில் புண் மற்றும் புரை நோய் ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த கண்ணில் பார்வை சற்று மங்கி உள்ளதால் யானை சோர்வாக இருப்பதாக தெரியவந்தது.

யானைக்கு கண் விழித்திரையில் பாதிக்கப்பட்டு இரவில் கண்கள் வெள்ளை நிறம் போன்று காணப்பட்டதால் கடந்த சில நாட்களாக வீடியோ கான்பிரசிங் முறையில் சென்னையிலுள்ள அரசு கால்நடை மருத்துவர் மூலமாக கண்சிகிச்சை வழங்கப்பட்டு அதற்கான மருந்துகளும் அளிக்கப்பட்டுவந்தன.

இந்நிலையில் கண் மருத்துவர்கள் ஆலோசனையின் பெயரில் நேற்றைய தினம் சென்னை மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடைத்துறையில் உள்ள சிறப்பு மருத்துவ உபகரணங்கள் விமானம் மூலமாக வரவழைக்கப்பட்டு அதனை பயன்படுத்தி மருத்துவர் சிவசங்கர், மதுரை மண்டல உதவி இயக்குனர் சரவணன் உள்ளிட்டோர் யானை கண்ணை பரிசோதித்து, தற்போது அளிக்கும் சிகிச்சை முறையே தொடருமாறு அறிவுறுத்தினர்.

இதனிடையே யானையின் மருத்துவபரிசோதனையின் முடிவை பொறுத்து தாய்லாந்து நாட்டில் யானைகளுக்கென பிரேத்யேகமாக செயல்படும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று மேற்சிகிச்சை வழங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

செய்தி: Ravi Chandran