குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை – நிழற்குடை, மரங்கள் , வீடுகள் இடிந்து விழுந்து சேதம்…!

உள்ளூர் செய்திகள்தமிழகம்

குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை – நிழற்குடை, மரங்கள் , வீடுகள் இடிந்து விழுந்து சேதம்…!

குமரி மாவட்டத்தில்  சூறைக்காற்றுடன் கனமழை – நிழற்குடை, மரங்கள் , வீடுகள்   இடிந்து விழுந்து சேதம்…!

குமரி மாவட்டத்தில் நேற்று மதியம் 12 மணி முதல் சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. மதியம் தொடங்கிய மழை இரவு வரை கனமழையாக விட்டு விட்டு நீடித்தது. இதனால் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.

நாகர்கோவில் நகரில் பெய்த கன மழையால் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து சாலையில் விழுந்தது. அதனை மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். கனமழையால் மாநகரின் முக்கிய சாலைகள் எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் டி.வி.டி. காலனி, செந்தூரா நகர், ரெயில்வே குடியிருப்பு, கம்பளம், ஒழுகினசேரி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் மழைநீர் புகுந்தது. சூறைக்காற்றுடன் வீசிய மழையால், மாநகரின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. குறிப்பாக நேசமணி நகர் பொன்னப்பநாடார் காலனி ஆகிய பகுதிகளில் மதியம் முதல் இரவு வரை மின் வினியோகம் இல்லாமல் இருந்தது. பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன. அவற்றை தீயணைப்பு வீரர்கள் எந்திரம் கொண்டு வெட்டி அகற்றினர்.

ராஜாக்கமங்கலம் யூனியனுக்கு உட்பட்ட சுண்டபற்றிவிளையில் புதிதாக ஒரு நிழற்குடை கட்டப்பட்டது. இந்த நிழற்குடை கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது.இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் நிழற்குடை இடிந்து விழுந்தது.

குமாரபுரம் தோப்பூரில் கல்யாணி ஓடையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் அந்த பகுதியில் சாலை மூழ்கியது. அழகப்பபுரம், பொட்டல்குளம் போன்ற பகுதிகளில் பெய்த மழையால் அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டது.

ராஜாக்கமங்கலம் அருகே எள்ளுவிளை ஊராட்சிக்கு உட்பட்ட வைராகுடியிருப்பு பகுதியில் சாலை முழுவதும் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளித்தது. கழிவுநீர் கால்வாயில் மண் கொட்டப்பட்டு அடைப்பு ஏற்பட்டதால் சாலையில் தேங்கிய மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் சகஜமாக வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, இனி வரும் காலங்களில் மழைநீர் தேங்காதவாறு கழிவு நீர் ஓடையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குளச்சல், மரமடி, குறும்பனை, இரும்பிலி பகுதியில் கனமழையால் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. குறும்பனை இன்னாசியார் ஆலய பங்குத்தந்தை ஸ்டீபன் இணைபங்குத்தந்தை ஜேக்கப் மற்றும் நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு மேடான பகுதிக்கு கொண்டு சென்று ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். மேலும், குளச்சல் பகுதியில் பெரும் கடல் சீற்றமும் ஏற்பட்டது.

பேயன்குழி நெடுந்சாலை அருகில் நின்ற பழமையான 300 வருட பெரிய ஆலமரம் புயலில் சரிந்தது விழுந்து.ஈத்தாமொழியை அடுத்த பொழிக்கரை மீனவ கிராமத்தில் சுமார் 50 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. மேலும் அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைக்குள் தண்ணீர் புகுந்ததால் பருப்பு, ரவை உள்ளிட்ட பொருட்கள் நாசமடைந்தது. இதுகுறித்து கேசவன்புத்தன்துறை ஊராட்சி தலைவி கெபின்ஷா ஆரோக் ெகாடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை மின்மோட்டார் மூலம் அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.மாவட்டம் முழுவதும் ஏராளமான வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் தூங்க முடியாமல் விடிய, விடிய தவித்தனர்.

நேற்று காலை 8 மணியில் இருந்து மாலை 4 மணி நிலவரப்படி நாகர்கோவிலில் 20 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. சுருளோடு- 36 மி.மீ, கன்னிமார்- 28.22 மி.மீ, பேச்சிப்பாறை- 2.7, பெருஞ்சாணி- 20.8 மி.மீ மழை பதிவாகி இருந்தது.

Leave your comments here...