தங்கக் கடத்தல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் அப்பாவி – “ஸ்வப்னா”
- July 10, 2020
- jananesan
- : 1310
- ஸ்வப்னா
கேரளாவில் 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது அங்கு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதன் விளைவாக முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் நீக்கப்பட்டுள்ளார்
கேரளாவை பூர்வீகமாக உடைய ஸ்வப்னா, 34, ஐக்கிய அரபு எமிரேட்சில் பிறந்து வளர்ந்தவர். அபுதாபி விமான நிலையத்தில் பயணியர் சேவைப் பிரிவில் பணியாற்றிய அவர், 2013ல், கணவரிடம் விவாகரத்து பெற்று, கேரளாவுக்கு திரும்பினார்.
திருவனந்தபுரத்தில் உள்ள ஏர் இந்தியா விமான நிறுவன அலுவலகத்தில் பணியாற்றினார். அப்போது, உடன் பணியாற்றிய அதிகாரி மீது, பொய்யான புகார் கொடுத்து, சர்ச்சையில் சிக்கினார். போலீஸ் விசாரணையில், பொய் புகார் கொடுத்ததை ஒப்புக் கொண்டார். பின், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரக அலுவலகத்தில் நிர்வாக செயலராக பணியாற்றினார். அப்போது தான், தங்கம் கடத்துவதற்கான சதித் திட்டத்தை தீட்டி, அதை செயல்படுத்தி வந்துள்ளார்.
துாதரகத்திலும் சர்ச்சையில் சிக்கியதை அடுத்து, கேரள மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணிக்கு சேர்ந்தார். ஏற்கனவே வழக்கு நிலுவையில் இருந்ததை மறைத்தது தொடர்பாக, போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, மேல் மட்டத்திலிருந்து போலீசாருக்கு நெருக்கடி வந்ததாக கூறப்பட்டது. துாதரக அலுவலக பணியிலிருந்து வெளியேறிய போதும், அங்குள்ள அதிகாரிகளுடன், தொடர்பில் இருந்துள்ளார் ஸ்வப்னா.போலி ஆவணங்களை தயாரித்து, துாதரகத்துக்கு உள்ள சிறப்பு அந்தஸ்தை தவறாக பயன்படுத்தி தங்கக் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டுள்ளார். துாதரக அதிகாரிகளை சரிக்கட்டுவதற்காக, அவர்களுக்கு திருவனந்தபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில், அடிக்கடி, ‘பார்ட்டி’ கொடுத்துள்ளார்.
திருவனந்தபுரத்தில், பிரமாண்ட பங்களா ஒன்றையும், ஸ்வப்னா கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு, கோடிக்கணக்கில் இருக்கும் என, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.மாநில அரசில் உயர்ந்த பொறுப்பில் உள்ள சில அதிகாரிகள், ஸ்வப்னா வீட்டுக்கு அடிக்கடி வந்து, அவரை சந்தித்துச் செல்வதும் வழக்கம் என்றும் கூறப்படுகிறது. அதிகாரிகளையும், ஆட்சியாளர்களையும் கைக்குள் போட்டு, தங்க வேட்டை நடத்திய ஸ்வப்னாவை, இப்போது, சுங்கத் துறை அதிகாரிகளும், போலீசாரும் துரத்தத் துவங்கி உள்ளனர்.
இந்த வழக்கில் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளரும் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சொப்னா சுரேஷுக்கும் சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில் முதன்மை செயலாளர் பதவி சிவசங்கர் இடமிருந்து பாதிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரக அலுவலகத்தில் ஏற்கனவே பணியாற்றிய சர்ஜித், ஸ்வப்னா ஆகியோர், இந்த கடத்தலின் பின்னணியில் இருப்பது தெரிய வந்தது. சர்ஜித் கைது செய்யப்பட்டார்; ஸ்வப்னா தலைமறைவானார்.
இந்நிலையில், தலைமறைவாக உள்ள ஸ்வப்னா, கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள முன் ஜாமின் மனுவில் கூறியுள்ளதாவது:தங்கக் கடத்தல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் அப்பாவி. என் மீது குற்றப் பின்னணி எதுவும் இல்லை. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிளை அலுவலகத்தில் பணியாற்றும் சில அதிகாரிகள், இந்த வழக்கில் என்னை சிக்க வைத்துள்ளனர்.
துாதரக அலுவலகத்திலிருந்து ராஜினாமா செய்தாலும், அங்குள்ள அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, சில வேலைகளை செய்து கொடுத்து வந்தேன். துாதரக அலுவலகத்தில் பணியாற்றும் ரஷீத் காமிஸ் என்பவர், விமான நிலையத்துக்கு வந்திருந்த பார்சலை, சுங்கத் துறை அதிகாரிகள் தர மறுப்பதாகவும், உதவும்படியும், என்னிடம் போனில் பேசினார். பார்சலை தர மறுத்தால், அதை, மீண்டும் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கே திரும்ப அனுப்ப ஏற்பாடு செய்யும்படியும், அவர் வலியுறுத்தினார்.இதற்காக சுங்கத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது தான், என்னை அவர்கள் சந்தேகப்பட்டனர். எனக்கு முன் ஜாமின் அளிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Chief Minister Pinarayi Vijayan wrote to the hon'ble @PMOIndia Shri. Narendra Modi about the TRV airport gold seizure case. CM requested for an investigation into this incident by central agencies concerned. He assured that the State Govt will provide all necessary assistance. pic.twitter.com/AxJm9FHc7M
— CMO Kerala (@CMOKerala) July 8, 2020
திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க, மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்து உள்ளது.
Leave your comments here...