வாயை கொடுத்து வாங்கி கட்டிய இம்ரான் கான் – ஒசாமா பின்லேடனை தியாகி என புகழாரம் : வலுக்கும் எதிர்ப்பு..!
- June 26, 2020
- jananesan
- : 1816
- Pakistan
அல்-கய்தா அமைப்பின் முன்னாள் தலைவர் ஒசாமா பின் லாடனை ‘தியாகி’ என்று குறிப்பிட்டுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். அவரின் சர்ச்சைக்குரிய பேச்சினால் கடும் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் சந்தித்துள்ளார். பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில், கடந்த 2011 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் சிறப்புப் படை பாகிஸ்தானுக்குள் நுழைந்து, அவர்கள் அனுமதியின்றி ஒசாமா பின் லாடனைக் கொன்றதிலிருந்து, இரு நாட்டு உறவிலும் எப்படி பிரச்னை எழுந்தது என்பது குறித்துப் பேசியுள்ளார் இம்ரான் கான்.
அமெரிக்க வெளியுறவுத் துறை பாகிஸ்தான் தொடர்பாக புதனன்று வெளியிட்ட மதிப்பீடு அறிக்கையில், அந்நாடு இன்னமும் பயங்கரவாதிகளின் புகலிடமாக விளங்குகிறது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானை குறிவைத்து செயல்படும் பயங்கரவாதிகளுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்க தலைவர் மசூத் அசார் பாகிஸ்தான் அரசின் பாதுகாப்பில் இருப்பதாக நம்பப்படுகிறது என கூறியிருந்தது. இந்த அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து வியாழனன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பார்லிமென்டில் பேசினார். அப்போது அல்கொய்தா தலைவன் ஒசாமா பின்லேடனை தியாகி என புகழ்ந்தார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவிற்கு உதவிய விதத்திற்காக என் நாடு அவமானத்தை சந்திக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரை ஆதரித்துவிட்டு, அதற்காக அவர்களிடமிருந்து விமர்சனத்தையும் பெற வேண்டிய நாடு வேறு எதுவும் இருக்க முடியாது. அபோட்டாபாத்தில் ஒசாமா பின்லேடனை அமெரிக்கர்கள் கொன்றனர். அவர் தியாகி. அமெரிக்கா நம் நாட்டிற்குள் நுழைந்து நம்மிடம் கூட சொல்லாமல் ஒருவரைக் கொன்றது பெரிய அவமானம்.” என்று பேசினார்.இந்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி இம்ரான் கானுக்கு கடும் கண்டனத்தை பெற்றுத் தந்துள்ளது. பாகிஸ்தான் எதிர்க்கட்சியினரே இம்ரான் கானை கடுமையாக விமர்சிக்கின்றனர்.
அவரின் இந்தப் பேச்சைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினரும் செயற்பாட்டாளர்களும் இம்ரான் கானுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர், கவாஜா ஆசிஃப், “இம்ரான் கான், வரலாற்றைத் திரித்துப் பேசியுள்ளார். இன்று அவர் ஒசாமா பின் லாடனை தியாகி என்று சொல்லியிருக்கிறார்,” என்று கொதிப்புடன் கருத்து தெரிவித்துள்ளார்.
அதேபோல அந்நாட்டைச் சேர்ந்த பிரபல செயற்பாட்டாளர், மீனா கபீனா, “சமீப காலமாக உயர்ந்து வரும் தீவிரவாதத்தினால்தான் உலகின் பல முளைகளிலும் முஸ்லீம்கள் பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் அதை இன்னும் மோசமாக்கும் வகையில் நமது பிரதமர், ஒசாமா பின் லாடனை தியாகி என்று குறிப்பிட்டுள்ளார்,” என ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார். “ஒசாமா பின்லேடன் பிரதமருக்கு வேண்டுமானால் ஹீரோவாக இருக்கலாம். ஆனால் நாட்டு மக்களுக்கு அவர் குற்றவாளி தான்” என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் எம்.பி ஷெர்ரி ரெஹ்மான் கூறினார்.
இம்ரான்கான் இப்படி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இது முதல் முறையல்ல. கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்ற இம்ரான்கான் “பின் லாடனை கண்டுபிடிக்க பாகிஸ்தனின் உளவத் துறை தகவல் தெரிவித்தது,” என்று கூறி சர்ச்சை கிளப்பினார்.
Leave your comments here...