சமஸ்கிருதத்தில் உள்ள ஊர் பெயர்களையும் தமிழில் மாற்ற வேண்டும் – அரசிற்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

தமிழகம்

சமஸ்கிருதத்தில் உள்ள ஊர் பெயர்களையும் தமிழில் மாற்ற வேண்டும் – அரசிற்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சமஸ்கிருதத்தில் உள்ள ஊர் பெயர்களையும் தமிழில் மாற்ற வேண்டும் – அரசிற்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

தமிழக ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்க, ஆங்கில எழுத்துக் கூட்டல்களில் மாற்றம் செய்து தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 1018 ஊர்களின் புதிய ஆங்கில எழுத்துக் கூட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதைப்போல் சமஸ்கிருதத்தில் உள்ள ஊர் பெயர்களையும் தமிழில் மாற்ற வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- 2018-2019 ஆம் ஆண்டு மானியகோரிக்கையின் போது தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் க.பாண்டியராஜன், “தமிழகத்தில் உள்ள ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்பு போன்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்கும் வகையில் மாற்றம் செய்யப்படும் என்றும் அதனை செயல்படுத்த 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும்” என்று 2018ம் ஆண்டு அறிவித்து இருந்தார்.அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் பரிந்துரையின் அடிப்படையில், முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள 1,018 ஊர்களின் பெயர்களில் தமிழ் உச்சரிப்பில் இருந்து ஆங்கில உச்சரிப்பில் வேறுபாடு உடைய பெயர்களில் திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

உதாரணமாக, திருவல்லிக்கேணி என்பதை ஆங்கிலத்தில் “Triplicane” என்று உச்சரித்து வந்த நிலையில் இனி அதை “Thiruvallikkeni” என்று உச்ச்ரிக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டை என்பதை “Tondiyarpet” என்பதில் இருந்து “Thandaiyaarpettai” என்று திருத்தப்பட்டு உள்ளது. வ.உ.சி நகர் – “V.O.C Nagar” என்பது “VA.OO.SI Nagar” ஆகவும், எழும்பூர் – “Egmore” என்பது “Ezhumboor” ஆகவும் மாற்றப்பட்டு உள்ளது.

இதேபோன்று சென்னையின் பல பகுதியின் பெயர்களும், கடலூர், சிவகங்கை, தர்மபுரி, திருவள்ளூர், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, திருப்பூர், தூத்துக்குடி, பெரம்பலூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், விருதுநகர், கரூர், விழுப்புரம், சேலம், வேலூர், திண்டுக்கல், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 1,018 ஊர் பெயர்களிலும் திருத்தம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழ் கலாச்சாரத்தையும், தமிழ் மொழியையும் காக்கும் பொருட்டு தமிழில் உள்ள பெயரை ஆங்கிலத்தில் வாசிக்க வேண்டுமென அரசு கொண்டு வந்துள் அரசாணையை தமிழ்நாடு முஸ்லிம் லீக் வரவேற்கும், அதே வேளையில் தமிழகம் முழுவதும் ஊர்கள், சாலைகள், தெருக்கள் ஆகியில் சமஸ்கிருதத்திலும் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. உதாரணத்திற்கு புளியங்காடு என்ற அழைக்கப்பட்டு வந்த ஊரின் பெயர் தற்போது திண்டிவனம் என சமஸ்கிருத மொழியில் மாற்றப்பட்டது.இப்படி பல ஊர்கள், சாலைகள், தெருக்கள் பெயர்களில் சமஸ்கிருத உள்பட பிற மொழிகளின் வாசம் வீசி கொண்டிருக்கிறது. அதனை வரலாற்றின் அடிப்படையில் ஆய்வு செய்ய தமிழ் அறிஞர்கள், வல்லுநர்கள் அடங்கிய குழு அமைத்து, உரிய தமிழில் பெயரை மாற்றி அமைக்க என அரசை தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கோரிக்கை விடுக்கிறேன்.இவ்வாறு முஸ்தபா தெரிவித்துள்ளார்.

Leave your comments here...